-
வறுமை கோட்டுக்கு கீழுள்ளாராம் சச்சின் டெண்டுல்கர்
[
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்துடன் ஆந்திராவில் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தது அம்பலமானது. அந்த ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதை அமைச்சர் ராம் நாராயண் ரெட்டி ஆதாரத்துடன் வெளியிட்டார்.
ஆந்திராவில் ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி தனியார் ஏஜென்சிகள் மூலம் நடந்தது. அவர்கள் தயாரித்த கார்டுகளில் சுமார் 30 சதவீதம் போலி என்று புகார் எழுந்தது. இதையடுத்து போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகள் வீடு வீடாக சென்று ரேஷன் கார்டுகளை சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நெல்லூரில் அமைச்சர் ராம் நாராயண் ரெட்டி தலைமையில் கலெக்டர் ராம்கோபால் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. போலி ரேஷன் கார்டுகளை அடியோடு ஒழிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது நெல்லூர் நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் பெயரில் அவரது போட்டோவுடன், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான வெள்ளை நிற ரேஷன் கார்டுகள் இரண்டு விநியோகிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த கார்டுகளின் எண்கள் பிஏபி-0982079 டி- 0179, பிஏபி- 0982079 டி-0374.
மைசூர் மகாராஜா குடும்பத்தினருக்கும் இதேபோல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான வெள்ளை நிற ரேஷன் கார்டு வழங்கப்பட்டிருந்தது. அதில் மைசூர் பேலஸ் போட்டோ ஒட்டப்பட்டிருந்தது. இதையும் அமைச்சர் ராம் நாராயண் ரெட்டி வெளியிட்டார். நெல்லூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 சதவீதத்துக்கும் அதிகமாக போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஏற்கனவே ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பெயரில் போலி ரேஷன் கார்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்: