-
தலைமைப் பண்புகளுக்கு உதாரண புருஷர் அஷ்ரப்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் தலைவராகவும் விளங்கிய எம். எச். எம். அஷ்ரபின் 9 ஆவது நினைவு தினம் இன்று.
தலைமைப் பண்புகளுக்கு பொருத்தமான உதாரணப் புருஷராக வாழ்ந்து வரலாறு படைத்தமையினால் தான், மக்களுக்குப் பிடிக்கும் மக்கள் தலைவனாக மலர்ந்தார் மர்ஹ¥ம் அஷ்ரப்.
தலைவர்கள் என்போர் மூன்று வழிகளில் உருவாகுகின்றனர். கூட்டமொன்றில் தெரிவு செய்யப்படும் ஒருவர், சமூகத்தின் முன் தலைவராக அறிவிக்கப்படுகின்றார்.
இவர் தெரிவான தலைவர். அதிகார பீடத்திலிருக்கும் அக்கிராசனர் தன் விருப்பம் போல் ஒருவரைத் தலைவராக நியமிக்கப்பட்டு, சமூகத்தின் முன் தலைவராக நிறுத்தப்படுகின்றார். இவர் நியமிக்கப்பட்ட தலைவர்.
மக்களால் விரும்பி ஏற்று மக்களாலே போற்றிப் புகழப்படும் ஒருவரே, மக்கள் தலைவராக - சமுதாயத்தின் தலைவராக சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படுகின்றார்.
இம்மூன்று வகை தலைவர்களில் முதலிரு தலைவர்களும் பதவி மாற்றம் ஆட்சி மாற்றம் கால மாற்றம் காரணமாக, இடையில் காணாமல் போய்விடுவர்.
இதற்கு வரலாற்று வழியில் பல உதாரணங்களைக் காண முடியும். ஆனால் - மக்களால் விரும்பி ஏற்று, மக்கள் தலைவனாக அங்கீகரிக்கப்படும் தலைவரே, வரலாற்றில் இடம் பெறுவார். இம்மூவகைத் தலைவர்களில் நாம் இன்று நினைவுகூரும் மர்ஹ¥ம் அஷ்ரப், மக்கள் தலைவராக வாழ்ந்தவர்; மறைந்தும் மக்கள் மனங்களில் வாழ்பவர்.
இலங்கையில் முஸ்லிம் சமூகம் என்பது, எடுப்பார் கைப்பிள்ளையாகவே 1981 வரை இருந்து வந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். பேரினவாத பெரும்பான்மைக் கட்சிகளில் ஒட்டியும் பற்றியுமே முஸ்லிம்கள் தங்கியிருந்தனர். அக்காலத் தலைவர்களும் காலத்தின் சூட்சுமம் கருதி, அவ்வழியிலேயே மக்களை வழிநடத்தினர்.
தேர்தற் காலங்களில் தேவைப்பட்டோர், ஆட்சி அமைத்ததும், அமைச்சர்களாய் ஆனதும் மறக்கப்பட்டவர்களாக ஆயினர். அவர்கள் போட்ட மிச்ச சொச்சங்களிலே திருப்தி காணும் சமூகமாகவே முஸ்லிம்கள் இருந்தனர். இதுவே நாட்டுக்கு (1948) சுதந்திரம் கிடைத்த பின்னரும் நடைமுறைப்படுத்தப்பட்ட தொடர் அரசியலாக இருந்து வந்தது.
இந்த அரசியல் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதா? என சிந்திக்கத் தலைப்பட்டார் அஷ்ரப். தேசிய அரசியலின் நகர்வுகள் இன்னொரு சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் சகோதரர்கள் தம் எதிர்காலம் குறித்து சிந்திக்கத் தொடங்கி விட்ட நிலைமை அவ்வப்போது நாட்டின் நாலா பகுதிகளிலும் இடம்பெற்று வரும் இனமுரண்பாட்டு மோதல்கள் என்பன, தலைவர் அஷ்ரபின் சிந்தனையை துரிதப்படுத்தின.
இந்த சிந்தனை கருகட்டலின் பிரசவம்தான் முஸ்லிம் களுக்கென தனித்துவம் பேண தனிக் கட்சியொன்று தேவை என்ற காலத்தின் கட்டளையை, தட்டிக்கழிக்க முடியாத பொறுப்புணர்வில் அவரால் அங்குரார்ப் பணஞ் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும்.
தலைவர் அஷ்ரப் 1981 இல் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அங்குரார்ப்பணஞ் செய்த பின், இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற குழந்தையை ஈன்றளித்துவிட்டு, தலைவர் அஷ்ரப் வாளாவிருக்க வில்லை. நாடெங்கும் பயணஞ் செய்து, சமுதாய உடன்பிறப்புக்களை சந்தித்துப் பேசினார். மேடை போட்டு முழங்கினார்.
சமுதாயத்தின் எதிர்கால நலனுக்காக காலத்தின் தேவையை உணர்ந்து தன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களை கொள்கைகளை திட்டங்களை நடவடிக்கைகளை விளக்கிப் பேசி, சமுதாயத்தை விழிக்கச் செய்தார். சமுதாய இளைஞர்களின் இதயங்களைத் தொட்டார்.
இதன் விளைவாக, ஊரெங்கும் கிளைகள் உருவாகின. முஸ்லிம்கள் சிந்திக்கலாயினர். முஸ்லிம் இளைஞர்கள் அணி திரண்டனர். சமுதாயத்தின் துறைசார் நிபுணர்களை பிரமுகர்களை பெருந்தகைகளை நேரில் சந்தித்தார். அவர்களையும் சிந்திக்கத் தூண்டிவிட்டார். இந்த ஆரோக்கிய வளர்ச்சி, தலைவர் அஷ்ரபின் நம்பிக்கைகளை மேலும் உறுதி செய்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையாளர் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விண்ணப்பித்தார். நல்ல நோக்கங்களை (நிய்யத்துக்களை) அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான் என்ற நியதியின்படி, அல்லாஹ்வின் பேரருளால் 1986 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாகத் தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த அங்கீகாரத்தின் பின், நாட்டில் நடந்த நகர சபை, மாகாண சபை, நாடாளுமன்ற தேர்தல்களில் எல்லாம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை போட்டியிடச் செய்தார். முஸ்லிம் இளைஞர்களை தேர்தற் களத்தில் குதிக்கச் செய்து, அபேட்சகர் தெரிவி லும் தலைவர் அஷ்ரப் பழைய முறை களை புறம் தள்ளிவிட்டு புதிய முறை யினை கையாண்டு புரட்சி செய்தார்.
பணக்காரர்கள் மேதாவிகள் மேட்டுக்குடியின் வாரிசுகள் போன்றவர்கள் மட்டுமே, தேர்தல்களில் போட்டியிடத் தகுதி பெற்றவர்களாக தெரிவு செய்யப்பட்டு, தேர்தற் களத்தில் நிறுத்தப்படும் பாரம்பரியம், நீண்டகால நடைமுறையாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இந்த அளவுகோல்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, சமுதாயப் பற்றுறுதி ஒன்றையே உரிய தகுதியாகக் கொண்டு அபேட்சகர்களை தெரிவு செய்தார்; அரசியலுக்கு அறிமுகஞ் செய்தார்.
ஒதுங்கியிருந்த சமுதாயப் பிரமுகர்களை எல்லாம், சமூகத்திற்கு சேவையாற்ற முன்வரும் படி அறைகூவி அழைத்தார். சமுதாய நலனுக்காக தொண்டாற்ற முன்வந்த படையினரை சமுதாயப் போராளி எனப் பெயரிட்டு அழைத்தார்.
தேர்தல்களில் ‘சமுதாயப் போராளிகள்’ வெற்றி பெறுவார்களா? தோல்வியுறுவார்களா? என்பதை தலைவர் அஷ்ரப் சிந்தித்ததைவிட, அரசியல் விழிப்புணர்ச்சி சமுதாய விடியலுக்கான தெளிவு நாட்டு சூழலை எடையோடும் அரசியல் அறிவு என சமூகத்தாரிடையே எழுச்சி பெற வேண்டும் என்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்தார்.
இதற்காக தேர்தல்களை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தினார். இன்றில்லாவிட்டாலும், நாளை அல்லது அடுத்த தேர்தலில் என் சமூகம் விழிப்படைந்தால் அதுவே என் வெற்றி என் சமுதாயத்தின் வெற்றி எனத் தூர நோக்கோடு காய் நகர்த்தினார். காரியமாற்றினார்.
தலைவர் அஷ்ரபின் இந்த காய் நகர்த்தல்கள் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் ஏறிய ஒவ்வொரு படித்தரங்களும் தலைவர் அஷ்ரபை சராசரி தலைவர்களிலிருந்தும் வேறுபடுத்தி உயர்த்தி, சாணக்கியமிக்க, சாதூர்ய தலைவராக உருவாக்கின எனக் கூறினால், நேர்நின்று சிந்திப்போர் ஒப்புக் கொள்வர்.
சராசரி அரசியல் தலைவன் அடுத்த தேர்தல் வெற்றியை மனதிற் கொண்டே செயற்படுவான். ஆனால் அரசியல் ஞானியோ அடுத்த சந்ததியை இனிவரும் தலைமுறைகளை உத்தேசித்தே பணியாற்றுவான் என அரசியல் அறிஞர்கள் கூறுவர். நம் தலைவர் அஷ்ரபும் நிகழ்கால தேர்தல் வெற்றியை விட, எதிர்கால அரசியல் விழிப்புணர்ச்சி என் சமுதாயத்தில் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையில் செயல்பட்டதால், அரசியல் ஞானியாகப் புகழப்படுகின்றார்.
இத்தகைய அரும்பெரும் தலைவனின் சீடர்கள் அவரின் மறைவினை அடுத்து, உதிரிக் கட்சிகளை துவக்கி, அதன் நிழலில் ஒதுங்கி, ஒற்றுமை என்னும் கயிற்றை கைவிட்டு, பிளவுண்டு சராசரி அரசியல்வாதிகளாகத் தொழிற்படுவது வேதனையைத் தருகிறது.
தலைவர் அஷ்ரப் எந்த சமுதாயத்தின் ஒற்றுமையைப் போகும் இடமெல்லாம் வலியுறுத்தி, ஒன்றுதிரட்டி, அரசியல் பலத்தைக் குவித்தாரோ, அந்த ஒற்றுமை இன்று சீர்குலைந்து காணப்படுவது, தலைவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகாது.
நாமெல்லாரும் தலைவர் அஷ்ரபின் விசுவாசமான சீடர்களாக தலைவர் அஷ்ரப் அணி திரட்டிய சமுதாயப் போராளிகளாக இருப்பது உண்மை என்றால், வேற்றுமைகளை வேரறுத்து ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் படிப்போமாக! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வசனத்தின்படி நாம் ஒன்றுபட்டு, நம் உரிமைகளை வென்றெடுப்போமாக? சமுதாயம் ஒன்றுபட்டால் தான் தலைவரின் வழியில் அரசியல் பேரம் பேசி, சமுதாய விடியலுக்கான அனுகூலங்கள் பலவற்றையும் பெறமுடியும்.
நாம் ஒன்றுபடாவிடில், என்றும் பல கட்சிகளில் பிரிந்தே நிற்போமானால், அது எதிரிகளுக்கு வாய்ப்பாகவே அமையும். நம் சமூகம் மீண்டும் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிடும். பேரினவாதக் கட்சிகளின் எடுப்பார் கைப் பிள்ளையாக நம் சமூகம் இருப்பதை விட , அணைக்கும் அருமந்த பிள்ளையாக இருப்பதே, அனைத்திற்கும் நல்லது என்பதை நாம் ஒவ்வொருவரும் தூரநோக்கோடு சிந்திப்போமாக!
எஸ்.எம். சஹாப்தீன்-Thinakaran
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


0 கருத்துரைகள்: