-
இலங்கை மீது ‘நெற்றிக்கண்ணை’த் திறக்கும் மேற்குலக ‘சிவபெருமான்களும்’, அடிபணிய மறுக்கும் ‘நக்கீர’ மகிந்த அரசும்!
- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகின் விமர்சனங்களும் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் இதில் முன்னிலை வகிக்கின்றன. பிரித்தானியா இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ‘சூரியன் அஸ்தமிக்காத’ சாம்ராஜ்யமாக கொடிகட்டிப்பறந்த நாடு. பிரித்தானியாவின் மூத்த பிள்ளை போன்ற அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகின் ‘பொலிஸ்காரனாக’ தன்னைத்தானே நியமித்துக்கொண்ட நாடு. எமது இலங்கை சுமார் 250 வருடங்களாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் உழன்ற நாடு. எமது நாட்டை கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக ‘சிப்பிலியாட்டி’ வரும் இனப்பிரச்சினைக்கும், கடந்த 25வருடங்களாக நாம் ‘அனுபவித்த’ உள்நாட்டுப் போருக்கும் காரணகர்த்தாக்கள் இந்த பிரித்தானியரே. தமது நாட்டில் பிரித்தானியரின் கொடூரமான காலனித்துவ ஆட்சிக்கெதிராக இந்திய மக்கள் தொடுத்த வீரம்செறிந்த சுதந்திரப் போராட்டம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் சுதந்திரத்தை பெற்றுத் தந்தது. ஆசியாவில் பிரித்தானியாவின் பிடி தகர்ந்த பின்னர் பிரித்தானியா பல்லு விழுந்த சிங்கம் போலானது.
பிரித்தானியா விட்டுச்சென்ற இடத்தை எடுப்பதற்கு அமெரிக்கா முன்வந்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அது சீன மக்களின் புரட்சியை அடக்க முயன்று படுதோல்வியடைந்தது. அதன் பின்னர் கொரிய மக்களின் சுதந்திரப் போராட்டத்தையும், வியட்நாம் உள்ளிட்ட இந்தோ – சீன மக்களின் தேச விமோசனப் போராட்டத்தையும் அடக்க முற்பட்டு மூக்குடைபட்டது. தனது தாழ்வாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கியூபாவின் புரட்சியையும், அதன் தலைவர் ஃபிடல் காட்ஸ்ரோவையும் கழுத்தைத் திருகிக் கொல்ல பலமுறை முயன்று தோற்றுப்போனது. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து சோசலிச சோவியத் யூனியன் சக்திமிக்க நாடாக மாறி, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோசலிசப்பாதைக்கு மாறி, சீனா, வியட்நாம், கொரியா போன்ற நாடுகளில் புரட்சி வெற்றி பெற்ற பின் ஆசிய – ஆபிரிக்க நாடுகளிலும், மத்திய கிழக்கிலும் காலனித்துவத்துக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டங்கள் தீச்சுவாலையாக கிளர்ந்து எழுந்தன. இவையெல்லாவற்றிலும் அமெரிக்கா தலையிட்டு அவமானகரமாக தோல்வியையே தழுவியது.
முதலில் பிரித்தானியாவும் பின்னர் அமெரிக்காவும் கடந்த 300ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆதிக்கம் செய்ய முயன்ற போதிலும், அதையெல்லாம் உலக மக்கள் வெற்றிகரமாக முறியடித்து வந்துள்ளனர் என்பதே உலக வரலாறு. இருந்த போதிலும் அவர்கள் தமது உலக ஆதிக்கப் பேராசையை விட்டபாடாக இல்லை. தமது நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அவர்களது ஆக்கிரமிப்பு படைகள் இன்று அந்நாடுகளின் சுதேச மக்களுடன் போரிடுவதற்கு அதுவே காரணம். அதேவேளையில் தமது ஆக்கிரமிப்பு நோக்கங்களை எதிர்க்கும் சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா, வெனிசுலா, ரஷ்யா, ஈரான், லிபியா போன்ற நாடுகளுடனும் மறைமுக அரசியல் - பொருளாதாரப் போராட்டங்களை, அமெரிக்க – பிரித்தானியா தலைமையிலான மேற்குலகம் நடாத்தி வருகின்றது. இந்த அணிவகுப்பில் இலங்கையில் தற்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசையும் இந்த மேற்குலக சக்திகள் தமது எதிரணியில் நிறுத்தி வைத்து, அதன் மீதும் தமது தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கை மீதான தாக்குதலை மேற்குலக சக்திகள் ஆரம்பித்திருப்பதன் நோக்கம் என்ன என்பது சிந்தனைக்குரியது. பொதுவாக புதிதாக சுதந்திரமடைந்த பெரும்பாலான ஆசிய – ஆபிரிக்க நாடுகளில் தேசிய இனப்பிரச்சினையே பிரதான பிரச்சினையாக இருந்து வருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையிலும் அதுவே உண்மை நிலவரமாகும். இந்த நாடுகளை கைப்பற்றி ஆட்சிசெய்த மேற்கத்தைய காலனித்துவ சக்திகளே அந்நாடுகளில் இனப்பூசல்களை உருவாக்கிவிட்டுச் சென்றவர்கள். புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகள் தமது சுதந்திரத்தை ஸ்திரப்படுத்த முடியாமலும், பொருளாதார சுபீட்சம் பெறமுடியாமலும், தொடர்ந்தும் மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளில் தங்கியிருப்பதற்காகவே, அந்த நாடுகளில் இனப்பூசல்கள் உருவாக்கப்பட்டதுடன், அதை மேற்குலக சக்திகள் பயன்படுத்தியும் வந்துள்ளன. இதை இலங்கையின் வரலாற்றில் இருந்து தெளிவாகக் காணமுடியும்.
மேற்குலக சக்திகள், ஒருபக்கத்தில் இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தை சுதந்திரத்துக்குப் பின் முதன்முதலில் நடைமுறைக்குக் கொண்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்த அதேவேளையில், மறுபக்கத்தில் பிரிவினைவாதத்தை கிளப்பிய தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ விடுதலைப்புலிகள் போன்றவற்றையும் ஆதரித்து வந்துள்ளதிலிருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும். உள்நாட்டு மோதல்களைப் பயன்படுத்தி தமது நலன்களை ஈடேற்றிக் கொள்வதே மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளின் எழுதப்படாத இயங்கு விதியாக இருந்து வருகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக இலங்கை அரசு வன்னியில் தொடுத்த இறுதி யுத்தத்தின் போது இது நன்கு தெளிவாகியது. புலிகளின் தலைமைத்துவத்தை நேரடியாகவே தலையிட்டுக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல மேற்கு நாடுகள் பகீரதப் பிரயத்தனம் எடுத்தன. இந்தியா மட்டும் இலங்கைக்கு அருகில் உள்ள ஒரு நாடாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த மேற்கு நாடுகள் இலங்கைக்குள் அத்துமீறிப் புகுந்து பிரபாகரனையும் அவரது சகாக்களையும் காப்பாற்றிச் சென்றிருப்பார்கள். மேற்கு நாடுகள் இறுதி நேரத்தில் தலையிட்டு எப்படியும் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தபடியால் தான், பிரபாகரனுக்கு ஆரம்பத்திலேயே தப்பியோட வாய்ப்பிருந்தும், அவர் அவ்வாறு ஓடாமல் கடைசி நிமிடம் வரை காத்திருந்து மரணிக்க நேர்ந்தது. அமெரிக்கா எப்படியும் காப்பாற்றும் என பிரபாகரன் உறுதியாக நம்பியிருந்ததாக, வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடி தமிழகத்தில் புகலிடம் தேடியிருக்கும், புலிகளின் மிகமுக்கிய ஆலோசகரான மு.திருவாவுக்கரசு ‘ஜூனியர் விகடன்’ இதழுக்கு வழங்கிய நேர்காணலில் ஒப்புக்கொண்டிருக்கறார் என்பது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.
மகிந்த ராஜபக்ச அரசு மேற்குலகின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களையும் மீறி, புலிகளை முற்றுமுழுதாக அழித்தொழித்து விட்டதே இன்று மேற்குலகம் இலங்கை மீது அறிவிக்கப்படாத ஒரு ‘போரை’த் தொடுத்திருப்பதற்குக் காரணமாகும். அதுமாத்திரமின்றி புலிகளை அழிப்பதற்கு மேற்குலகிற்கு பிடிக்காத சீனா, ரஷ்யா, முன்னாள் சோவியத் குடியரசுகள், இந்தியா, பாகிஸ்தான் என்பனவற்றிடம் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்கியமையும் அவற்றுக்கு கோபமூட்டிய நடவடிக்கையாகும்.
இந்த மேற்குலக நாடுகள் ஜனநாயகத்தின் பெயரால், பல நாடுகளில் உண்மையான ஜனநாயக அரசுகளை குழிதோண்டிப் புதைத்த நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கத்திற்கும் ஆயுதங்கள் விற்று, புலிகளுக்கும் ஆயுதங்கள் விற்று இலாபமீட்டவும், ஆதிக்கத்தை நிலைநாட்டவுமே அவை விரும்புகின்றன. இலங்கையில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசாங்கத்தை, சகல விதமான பயங்கரவாத செயல்களையும் பயன்படுத்தி புலிகள் போன்ற ஒரு இயக்கம் சீர்குலைக்க முயல்வதைப்பற்றி மேற்குலத்திற்கு எவ்விதமான கவலையும் இல்லை. அவ்வாறான ஒரு இயக்கத்தை அழிக்க முற்படும்போது மட்டும் ஜனநாயகத்தின் பெயரால் , மனித உரிமையின் பெயரால் அதைத் தடுப்பதற்கப் படாதபாடுபடுகின்றன.
இப்பொழுது இலங்கையில் யுத்தம் முடிவுற்றுவிட்டபடியால், இலங்கை இனி பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்தி வேகமான வளர்ச்சியை அடைந்துவிடும் என்பதுதான் மேற்குலக ஆதிக்க சக்திகளின் தற்போதைய கவலையாகும். அதனால் தான் அவை சர்வதேச நாணயநிதியம் வழங்கவிருந்த கடனுதவியை தடுப்பதற்கு பல வழிகளிலும் முயன்றன. அது இயலாமல் போனதும் ஐரோப்பிய யூனியன் ஆடை ஏற்றுமதி சம்பந்தமாக இலங்கைக்கு வழங்கிவரும் ஜி.எஸ்.ரி வரிச்சலுகையை இப்பொழுது நிறுத்திவிட முயல்கின்றன. மேற்குலகின் இந்த முயற்சி மறைமுகமான ஒரு பொருளாதாரத் தடையாக இருந்தபோதிலும், இலங்கை அரசு அதற்கு மசிந்து கொடுப்பதாகவில்லை. இலங்கையின் இலங்கையின் இந்தத் துணிச்சலுக்கு அதன் தலைமைத்துவத்தின் உறுதியான தேசிய – சுயாதீனக் கொள்கைகள் மட்டும் காரணமல்ல.
இன்று உலக அரங்கின் பொருளாதாரச் சமவலுநிலை வெகுவாக மாறிவிட்டது. ஒருகாலத்தில் மேற்குலகின் கைகளிலேயே உலகின் 90 வீதமான கொருளாதார வளங்களும், அந்நியச் செலாவணி கையிருப்புகளும் இருந்தன. அமெரிக்காவின் டொலர் நாணயம் இரண்டாவது தங்கமாக, சில வேளைகளில் அதற்கும் மேலாக கணிக்கப்பட்டது. ஆனால் இன்று மிகப்பெரிய சோசலிச சீனாவும், மிகப்பெரிய ஜனநாயக இந்தியாவும், புத்தெழுச்சி பெற்றுவரும் ரஷ்யாவும், எண்ணெய் வளமிக்க ஈரான், வெனிசுலா, லிபியா போன்றவையும் உலக செல்வத்தின் கணிசமான பகுதியை தம்வசம் வைத்திருக்கின்றன. மறுபக்கத்தில் கட்டுப்பாடற்ற ஏகபோக மூலதனப் போட்டி காரணமாக மேற்கத்திய முதலாளித்துவ உலகம் முழுவதும் அண்மையில் பெரும் பொருளாதார சுருக்க நிலை (நெருக்கடி) ஏற்பட்டது. அதிலிருந்து விடுபடுவதற்குக் கூட அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் சீனாவிடம் கெஞ்சி உதவிகேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சீனப் புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் மேற்குலகம் ஒன்று திரண்டு, புதிய சீனாவை உலக வரைபடத்திலிருந்து அழித்து விடுவதற்காக, அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடை விதித்த நிலை எங்கே, இன்று அதே நாட்டிடம் தமது மீட்சிக்காக கையேந்தும், கெஞ்சும் நிலை எங்கே? வருங்காலத்தில் உலகப் பொருளாதாரம் மேலும் மேலும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து செல்லக்கூடிய அறிகுறிகளே அதிகம் தென்படுகின்றன. (அதைத்தான் சீன மக்களின் பெருந்தலைவர் மாஓ ‘மேலைக்காற்றை கீழைக்காற்று ஒரு நாள் மேவும்’ என சொல்லிச் சென்றாரோ?) இதன் காரணமாக மேற்குலகம் ஒரு வெறிபிடித்த நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது. உலக வளங்களை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்றாவது உலகயுத்தம் ஒன்றை அவை ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் சின்னஞ்சிறிய இலங்கை மேற்குலகின் மிரட்டல்களுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நிற்பதன் விளைவாகவே, உலக அரங்கில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அத்தனை நாடுகளும் இலங்கையை ஆதரித்து நிற்கின்றன. இதை சில மாதங்களுக்கு முன்னர் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத் தொடரின் போது இலங்கையை கண்டித்து மேற்குலகின் பின்னணி ஆதரவுடன் கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தற்பொழுது இலங்கைக்கு எதிராக மேற்குலகால் விடுக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடை முயற்சிகளும் இவ்வாறே முறியடிக்கப்படுவது நிச்சயம். உலகின் சக்திவாய்ந்த நாடுகளான சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு அரசியல் - ராஜதந்திர ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் உதவக் காத்திருக்கின்றன. அதுமாத்திரமின்றி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முறை மேற்கத்திய நாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வழிமுறையைக் கொண்டது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்குலகம் அரசியல் உள்நோக்குடன் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டுவரும் சீர்குலைவு நடவடிக்கைகளை இலங்கை அரசு தனது மக்களினதும், நட்பு நாடுகளினதும் உதவியுடன் உறுதியுடன் எதிர்த்துப் போராடி வருகின்ற போதிலும், அதன் பக்கத்திலும் பல முக்கியமான குறைபாடுகள் இல்லாமல் இல்லை. வன்னியில் இறுதி யுத்த நடவடிக்கையின் போது சொல்ல முடியாத இழப்புகளுடன் இடம்பெயர்ந்து வந்து, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும் அவர்களைது சொந்த இடங்களில் குடியேற்றும் விடயத்தில், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியான முறையில் முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பல தரப்பினராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் நியாயம் இல்லாமல் இல்லை. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்து பார்க்கையில், அவர்களது மன ஆதங்கம் உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.
இன்னொரு காரணத்துக்காகவும் இலங்கை அரசாங்கம் இதில் உடனடிக் கவனம் செலுத்துவது அவசியம். வன்னியில் புலிகளின் தலைமையை காப்பாற்ற முடியாமல் போன மேற்குலக சக்திகள் இப்பொழுது இந்த இடம்பெயர்ந்த மக்களை வைத்து இலங்கை அரசுக்கெதிரான தமது நாசகார அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. மீள்குடியேற்ற விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் போர்வைக்குள் இயங்குகின்ற, உண்மையான அரசியல் - நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருக்கின்ற அரசுயந்திரமான அதிகார வர்க்கமே மீள்குடியேற்ற விடயத்தில் ஏற்படுகின்ற தாமதத்திற்கு காரணம் என்ற போதிலும், நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கின்ற அரசாங்கமே அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவும், பொறுப்புக் கூறவும் கடமைப்பட்டுள்ளது.
அடுத்ததாக, இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான, நீடித்த தீர்வைக் காண்பதிலும், இலங்கை அரசாங்கம் தனது உறுதிப்பாட்டையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்தாத ஒரு சூழலே நிலவுகின்றது. தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கி, அவர்களை நாட்டின் தேசிய வாழ்வில் ஒன்றிணைப்பதற்கான முயற்சிக்கு எதிராக, அரசாங்கத்திற்குள்ளும் வெளியேயும் மட்டுமின்றி, இராணுவத்திற்குள்ளும் இருக்கின்ற சில பேரினவாத சக்திகள் கிளப்பும் எதிர்ப்புக்களால், இலங்கை அரசாங்கம் ஒரு தயக்க நிலைக்கு, செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த தூரதிஸ்ட வசமான நிலையால் மீண்டும் பிரிவினைவாத – பயங்கரவாத சக்திகள் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து நிலவுவதுடன், மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள் அவ்வாறான ஒரு நிலைக்கு தூபம் போடுவதையும் காண முடிகிறது. இது இலங்கையின் எதிர்காலத்திற்கு பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
எனவே இத்தகைய ஒரு சூழ்நிலையில், நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் உடனடி – நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசர அவசியமாக சில நடவடிக்கைகளை உடனடியாகவும் உறுதியாகவும் எடுக்க வேண்டும் என்பதே அனைத்து ஜனநாயக சக்திகளினதும், தேசபக்த சக்திகளினதும் தற்போதைய வேண்டுகோளாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்: