Advertisement



  • பள்ளிப்பட்டு பட்டாசு விபத்தில் 32 பேர் பலி:அனுமதியின்றி நடத்திய பட்டாசு கடைக்கு `சீல்' வைப்பு அதிகாரிகள்-போலீசார் 7 பேர் சஸ்பெண்டு ;பட்டாசு வியாபாரி உள்பட 5 பேர் கைது


    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஜார் தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 42) என்பவர், தீபாவளியை முன்னிட்டு பள்ளிப்பட்டு சோளிங்கர் ரோட்டில் உள்ள ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலக்கடலை மில் குடோனை வாடகைக்கு எடுத்து அதில் பட்டாசு வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் திடீரென்று அங்கு தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஆனந்தகுமாரும், அவரது ஊழியர்கள் சிலரும் குடோனை விட்டு வெளியே ஓடி வந்து விட்டனர்.

    பட்டாசுகள் வெடித்துச் சிதறியபடி தீ பயங்கரமாக எரிந்ததால், பட்டாசு வாங்க வந்தவர்கள் குடோனில் இருந்து வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர். ஹாலில் இருந்த அவர்கள் அனைவரும் பட்டாசுகள் பயங்கரமாக வெடிப்பதைப் பார்த்து பயந்துபோய் ஹாலை ஒட்டி இருந்த மற்றொரு அறைக்குள் தஞ்சம் புகுந்தனர்.

    அந்த அறைக்கு கதவுகள் இல்லாததால், ஹாலில் வெடித்த பட்டாசுகள் அவர்கள் இருந்த அறையில் வந்து விழுந்தன. அந்த அறையிலும் அதிக அளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இதில் அந்த பட்டாசுகளும் வெடித்துச்சிதறின. இதனால் அறையில் தஞ்சம் அடைந்த அனைவரும் வெளியேற வழி இல்லாததால் தீயில் சிக்கி உடல் கருகி பலியானார்கள்.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அப்போது அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்ததாலும், குடோன் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்திருந்ததாலும் தீயணைப்பு படையினரால் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை.

    இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிகுமார், கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், ஐ.ஜி. ஆசிஸ் பங்ரா, டி.ஜ.ஜி. துரைராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இந்த கோர சம்பவத்தில் 32 பேர் பலி ஆனார்கள். தீயணைப்பு படையினர் குடோனுக்குள் சென்று பார்த்தபோது, ஓர் அறையில் 32 பேர் உடல் கருகி ஒரே குவியலாக பிணங்களாக கிடந்தனர். தீயணைப்பு படையினர் அந்த உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    அதன்பிறகு, 32 பேரின் உடல்களையும் தனித்தனி மூட்டையாக கட்டி இரண்டு சரக்கு வண்டிகளில் ஏற்றி திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    தீயில் கருகி பலியானவர்களில் 26 பேர் ஆந்திர மாநிலத்தையும், 5 பேர் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது. இறந்த மற்றொருவர் யார் என்று தெரியவில்லை.

    மேலும் இந்த விபத்தில் ரேணிகுண்டாவைச் சேர்ந்த சிவா (வயது 40), கோபி, சோமசுந்தரம், புண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (45) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிவாவும், ரமேசும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.

    இந்த சம்பவத்தால், பள்ளிப்பட்டில் தீபாவளி பண்டிகைகளை இழந்தது. மக்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

    சென்னையில் இருந்து சென்ற தடயவியல் நிபுணர்கள், பட்டாசு விபத்து நடந்த குடோனில் சோதனை நடத்தினார்கள். அவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த வெடி விபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளர் ஆனந்தகுமார், குடோன் உரிமையாளர் ஜெய்சங்கர், கடை ஊழியர்கள் மது, ஜெகதீசன், பாபு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பட்டாசு குடோன் தீ விபத்து சம்பவத்தில், கடமையை சரிவர செய்ய தவறியதாக பள்ளிப்பட்டு தாசில்தார் உள்பட 7 பேரை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிகுமார் `சஸ்பெண்டு' செய்து உள்ளார்.

    அவர்கள் விவரம் வருமாறு:-

    1. ஜான் பென்னார்னீன் (பள்ளிப்பட்டு தாசில்தார்)

    2. சங்கரி (மண்டல துணை தாசில்தார்)

    3. அருண்குமார் (நில வருவாய் ஆய்வாளர்)

    4. சையத் பாபு (கிராம நிர்வாக அலுவலர்)

    5. வெங்கடேசன் (ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர்)

    6. கோபால் (பள்ளிப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர்)

    7. பாலசுப்பிரமணியன் (தனிப்பிரிவு முதல்நிலை காவலர்)

    பட்டாசு குடோன் தீ விபத்து பற்றி விசாரணை நடத்த, மாவட்ட வருவாய் அலுவலர் மோகன சுந்தரத்தை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்து உள்ளது. அவர் நேற்று விபத்து நடந்த குடோனை பார்வையிட்டு அதற்கு `சீல்' வைத்தார். பள்ளிப்பட்டு நகரில் உள்ள மற்ற பட்டாசு கடைகளுக்கும் `சீல்' வைக்கப்பட்டது. அந்த கடைகளில் உள்ள பட்டாசுகளை அழிக்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.

    தீ விபத்து நடந்த குடோனில் இருந்து 3 பேர் தப்பிச்சென்று விட்டதாக தெரிய வந்து இருப்பதாகவும், அவர்களை போலீசார் தேடி வருவதாகவும், விசாரணை அதிகாரி மோகன சுந்தரம் தெரிவித்தார்.

    அவர் இன்னும் ஒரு வாரத்தில் தனது விசாரணை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வார் என தெரிகிறது.

    இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன? என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை. மின்சார கசிவின் காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

    குடோனுக்கு பட்டாசு வாங்க வந்திருந்தவர்களுடன் வந்த ஒரு குழந்தை தனது கையில் வைத்திருந்த மத்தாப்பு குச்சியை கொளுத்தியதாகவும், அப்போது தீப்பொறி பறந்து பட்டாசுகளில் விழுந்ததால் அவை வெடித்துச் சிதறியதாகவும் ஒருவர் தெரிவித்ததார்.

    என்றாலும் விசாரணைக்கு பின்னர்தான் உண்மையான காரணம் தெரிய வரும்.

    விபத்து நடந்த பட்டாசு குடோனில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கேட்டு ஆனந்தகுமார் தனது மனைவி வாணி பெயரில் மனு செய்து இருந்தார். அதற்கு வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை சார்பில் அனுமதி வழங்குவதற்கு பரிந்துரையும் செய்யப்பட்டு இருந்தது.

    ஆனால் அனுமதி வழங்க வேண்டிய திருத்தணி ஆர்.டி.ஓ. லஞ்சம் வாங்கிய வழக்கில் `சஸ்பெண்டு' செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திருவள்ளூரைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தற்காலிக பொறுப்பு ஏற்று இருந்தார்.

    இதனால் ஆனந்தகுமாருக்கு பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே தனது தந்தை குப்பையா செட்டி பெயரில் உரிமம் இருக்கிறது என்ற எண்ணத்தில் ஆனந்தகுமார், பட்டாசு விற்பனையை நடத்தியதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அனுமதி இல்லாமல் யாரும் பட்டாசு கடை நடத்துகிறார்களா என்று தீவிரமாக கண்காணிக்கும் படி அந்தந்த பகுதி துணை சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் எங்கும் அனுமதி இல்லாத பட்டாசு கடை இல்லை என்று டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனைத்து துணை சூப்பிரண்டுகளும் தகவல் அனுப்பினார்கள். இப்போது, விபத்து நடந்த குடோன் அனுமதி இல்லாமல் செயல்பட்டு தெரியவந்து உள்ளது. இதை கண்டுபிடிக்க தவறியதற்காக திருத்தணி துணை சூப்பிரண்டு வேணுகோபால் மீதும் இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos