-
சரத் பொன்சேகாவின் அமெரிக்க பயணம்: பின்னணியில் நடந்தது என்ன?
சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார். முன்னரே அறிவிக்கப்பட்டபடி இவரது விஜயம் கடந்த 17 ஆம் திகதிவரை உத்தியோகபூர்வமானதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், கடைசியில் அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பொன்சேகாவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக தெரியவருவதாவது:-
கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதிவரை சரத் பொன்சேகாவின் அமெரிக்க விஜயம் உத்தியோகபூர்வமானதாகவும் விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க சென்று அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொபேரட் ப்ளெக்கை சந்திப்பதாகவும் காவாயில் அமைந்துள்ள அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை தலைமையகத்தில் இடம்பெறவுள்ள இராணுவ அதிகாரிகளின் சந்திப்பில் கலந்துகொள்வதாகவும் சரத் பொன்சேகாவின் விஜயம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்புக்களுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு அமெரிக்க அரசினால் முன்னர் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்து.
ஆனால், கடந்த 17 ஆம் திகதி முன்னாள் இராணுவதளபதி சரத் பொக்சேகாவை சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் பட்ரிக்கா கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ வதிவிடத்துக்கு அழைத்து, அமெரிக்க அரசு சரத் பொன்சேகாவை கவாயில் நடைபெறும் இராணுவ தளபதிகள் கலந்துகொள்ளும் சந்திப்புக்கு அனுப்பியிருந்த அழைப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசு போர் நடைபெற்ற காலப்பகுதியில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை தொடர்பாக அமெரிக்க அரசு விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது. அந்த அறிக்கையில் பெருந்தொகையான மனித உரிமை மீறல்கள் சிறிலங்கா படைகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில், அவ்வாறான மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட அரச படைகளுக்கு தளபதியாக பதவியிலிருந்தவர் சரத் பொன்சேகா. ஆகவே, அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசு அமெரிக்க அரசினால் கோரப்பட்டுள்ளநிலையில், அந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமான சந்திப்புக்கு அழைப்பு விடுப்பது பொருத்தமாக அமையாது என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா அரச நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக கலந்துகொள்ளும் விவகாரத்துக்கு அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளநிலையில், தனது விடுமுறையை கழிப்பதற்கென சரத் பொன்சேகா கடந்த வெள்ளியிரவு தனது மனைவி அனோமாவுடன் அமெரிக்காவை நோக்கி பயணமாகியுள்ளார். தனது உதவியாளர் பிரிகேடியர் அதுல சில்வா மற்றும் மெய்பாதுகாவலர்களான இரண்டு கொமாண்டோக்கள் ஆகியோருடன் டுபாய் ஊடாக அமெரிக்கா செல்லும் விமானத்தில் சரத் பொன்சேகா பயணமாகியுள்ளார்.
அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயமாக மாறியுள்ள சரத் பொன்சேகாவின் இந்த பயணம் காலாவதியாகவும் அவரது அமெரிக்க விஸாவை நீடிப்பதற்கானதாகும் என்றும் கடந்த தடவை இவர் விஸா நீடிப்பாக சென்றிருந்தபோது அமெரிக்க குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் இவரது நடவடிக்கைகள் குறித்து சுமார் இரண்டு மணிநேரம் விசாரணைசெய்யப்பட்டதாகவும் இம்முறை சரத் பொன்சேகா அமெரிக்கா நுழைவதற்கு முன்னர் அவர் மீது விசாரணைகள் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்க தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வ சந்திப்புக்களை மேற்கொள்வதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்ததால் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி சிறிலங்காவுக்கு திரும்புவதாக ஓழுங்கு செய்திருந்த சரத் பொன்சேகா, தற்போது அந்த சந்திப்புக்கள் அமெரிக்க அரசினால் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நவம்பர் 7 ஆம் திகதியே நாடு திரும்புவதாக திட்டமிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்: