பகுதி 1
எதிர்க்கும் புலிகளின் சதிக் கூட்டம்" என்ற தலைப்பில் கடந்த சனியன்று "டெய்லி மிரர்" பத்திரிகையில் டி.பி.எஸ்.ஜெயராஜ், தமது பத்தியில் வரைந்த கட்டுரை இங்கு பிரசு ரமாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்ட நிலைமையை ஒட்டி பல்வேறு கட்டுரைகளை எழுதி சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் அவர். கொழும்பில் தமிழ், ஆங்கில ஊடகங்களில் நீண்டகாலம் பணி புரிந்த டி.பி.எஸ்.ஜெயராஜ் தற்போது கனடாவில் வாழ்ந்த படி ஊடகப்பணி ஆற்றி வருகின்றார். djeyaraj2005 @yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அவருடன் தொடர்புகொள்ளலாம் என "டெய்லி மிரர்" பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. .
"தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று அறியப்பட்டு வந்த அரசியல் இராணுவக் கட்டமைப்பின் இயக்கம் இலங்கையின் எல்லைக்குள் பெரும்பாலும் செயலிழந்துவிட்டது. புலிகளின் உயர் தலைவர் பிரபாகரனும் சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட அவர்களின் இராணுவத் துருப்பினரும் இப்போது உயிர் வாழ்வோர் மத்தியில் இல்லை. அந்த அமைப்பின் அரசியல் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஏனைய உறுப்பினர்கள் இலங்கை அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காடுகளில் சிறு குழுக்களாகச் சிக்குண்டுள்ள புலிகள் மட்டும் வாய்ப்பும், இடமும் கிடைக்கையில் சிறிய அளவிலான கெரில்லா யுத்தத் தாக்குதல்களை நடத்த முயன்று வருகின்றனர். அவர்களின் தாக்கம் புறக்கணிக்கத்தக்கது. இதேசமயம், மறைந்திருந்து செயல் நடவடிக்கைகளில் ஈடுபடும் புலிகளின் செயற்பாட்டாளர்களை நாட்டின் பல பகுதிகளிலும் திட்டமிட்ட வகையில் தேடி வேட்டையாடும் விவகாரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒழுங்காக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்கள் இந்த விவகாரங்கள் ஊடகங்களுக்கு எட்டாமல் பார்த்துக்கொள்வதிலும் சிரத்தையாக உள்ளனர். இதேபோன்று, இடம்பெயர்ந்த அகதிகளுக்கு மத்தியில் அவர்களின் முகாம்களில் ஒளிந்திருக்கும் புலிகளைக் களைந்தெடுக்கும் நடவடிக்கையும் ஒழுங்காக முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்
இலங்கையில் நடைமுறையில் அழித்தொழிக்கப்பட்டாலும் அதன் வெளிநாட்டுக் கட்டமைப்பு தொடர்ந்தும் ஆபத்தானதாகவே விளங்குகின்றது. வெளிநாடுகளில் உள்ள புலிகளின் மூலங்களை புலிகளின் "எச்சங்கள்" அல்லது "மிச்சங்கள்" என்று வர்ணிக்கும் போக்கு ஊடகங்களின் ஒரு பகுதியிடையே காணப்படுகின்றது. இந்த விவரிப்பு சரியானதல்ல. புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புகள் உறுதியானவையாகவும் எப்போதும் போல திடமானவையாகவுமே உள்ளன. புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் கணிசமான பகுதியினர் மத்தியில் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் ஆதரவையும் செல்வாக்கையும் பெற்று அனுபவித்து வருகின்றது.
இத்தகைய பருத்த மூலாதாரம் தம் வசம் இருந்தும் கூட, அத்தகைய வளத்தை யதார்த்த பூர்வமான வகையில் பயன் தரக்கூடிய முறையில் பிரயோகிக்கவோ, களத்துக்குக் கொண்டுவரவோ புலிகள் அல்லது புலிகள் ஆதரவு மூலங்களால் முடியவில்லை. அதற்குப் பிரதான காரணம், பிரபாகரனின் மறைவை அடுத்து வெளிநாட்டில் உள்ள புலிகளின் தரப்பில் ஏற்பட்ட ஐக்கியமின்மையே. சுருக்கமாகக் கூறுவதானால் பிரபாகரனின் பின்னராக விரியும் களத்தில் தலைமை பற்றிய இழுபறியே பிரச்சினையாகும்.
இராணுவப் பின்னடைவுகளின் பின்னர் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகளே தப்பிப் பிழைத்து எஞ்சியவை என்ற காரணத்தினால், இலட்சியத்தை நோக்கி முன்நகர்வதில் இந்தப் பிரிவுகளின் பொறுப்பு கடப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.
பிரிவுகள் பிளவுகள்
அந்தப் பொறுப்பை நிறைவு செய்வதற்கு முதலாவதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்போதைய சரியான இக்கட்டான நிலைமை குறித்து நனவு பூர்வமான திறனாய்வும், விழிப்புணர்வும் அவசியம்.
இரண்டாவதாக யதார்த்தபூர்வமான, சாத்தியப்பாடான அணுகுமுறை தெரிவுசெய்யப்பட்டு பின்பற்றப்படவேண்டும்.
மூன்றாவதாக ஏற்றுக்கொள்ளத்தக்க, திறமைமிக்க ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும்.
இந்த விடயங்களில், இதுவரை எந்த இணக்கமுமே ஏற்படவில்லை.ஆனால் முரண்பாடுகள்தாம் அநாகரிகமான முறையில், தனிப்பட்ட மட்டத்தில் மோசமாக வெடித்துள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு யார் தலைமை வகிக்கின்றார்கள் என்பதே இப்போது அடிப்படைப் பிரச்சினையாகும். குழுப் பிளவுகள் மூர்க்கமடைந்திருக்கின்றன.
வெளிநாட்டில் பெருமளவில் ஈட்டப்படும் வருமான விவகாரமே நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியிருக்கின்றது. இப்போது அவற்றைக் கட்டுப்படுத்திக் கண்காணிப்பது யார்? அத்தகைய கட்டுப்பாடுகளைப் பயன்தரும் முறையில் தொடர்ந்து பேணமுடியுமா? வழமைபோல நிதி சேகரிப்பைத் தொடர இயலுமா? அல்லது அது வறண்டு போய்விடுமா? எப்படி நிதி சேகரிப்பு விடயத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்?
விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்குள் இன்று வாழும் சுதந்திரமாக உள்ள ஒருவர் என அறியப்படுபவர் "கே.பி." என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன். இவரே எஞ்சியுள்ள புலிகளின் தலைவர்களுள் மிக சிரேஷ்ட தரத்தில் உள்ளவர்.
கே.பியே ஒரு காலத்தில் புலிகளின் பிரதான ஆயுத சுவீகரிப்பாளராக விளங்கியவர். புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகளையும் நிதி சேகரிப்பு பரப்புரையையும் கண்காணித்து வழிநடத்தியவர்.
கே.பியின் பங்கு
2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் கே.பியின் பங்களிப்பு புலிகள் இயக்கத்தில் குறைத்து மதிப்பிடப்பட்டது. அவர் தரம் தாழ்த்தப்பட்டு, பின்தள்ளப்பட, அவருக்குப் பதிலாக புதியவர்கள் வளர்த்தெடுக்கப்பட்டனர். கே.பிக்கு எதிரான விஷமப் பிரசாரத்தை புலிகளின் முன்னைய அரசியல் பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்ச் செல்வனும், முன்னாள் வெளிநாட்டு நிர்வாகப் பொறுப்பாளரான காஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் வீரகுட்டி மணிவண்ணனும் தலைமை தாங்கி முன்னெடுத்தனர்.
கே.பிக்கு எதிராக ஊழல், திறமையின்மை, பாலியல் முறைகேடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. ஆயினும், பிரபாகரனினால் "கழுதை" என அன்புடன் விளிக்கப்பட்ட இந்த மூத்த புலி உறுப்பினர், தாம் நிரபராதி என்பதை நீண்ட இழுபறி விசாரணைகளின் மூலம் நிரூபித்தார்.
தமது பெயரைக் காப்பாற்றிக்கொண்ட கே.பி., மனம் நொந்த நிலையில், 2003 இல் வெளிநாட்டில் சுயமாகவே பணியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டார். எனினும் பிரபாகரனுடன் தொடர்புகளைப் பேணி வந்தார். தாய்லாந்து வாசி ஒருவரை மணந்துகொண்ட கே.பி. குடும்பகாரனானார்.
2006 இல் இருந்து புலிகள் இராணுவப் பின்னடைவுகளைச் சந்திக்கத் தொடங்கினர்.ஆயுதங்களை சு வீகரித்து, பாதுகாப்பாக வட பெரு நிலப்பரப்பான வன்னிக்குத் திறமையாகக் கடத்தும் விடயத்தில் கே.பிக்கு நிகரான மாற்று ஆளைப் புலிகள் பெறமுடியாமல் போனமையே இதற்குப் பிரதான காரணமாகும்.
நட்பு நாடுகள் தந்துதவிய தகவல்கள் மூலம் புலிகளின் எட்டு அல்லது ஒன்பது கப்பல்களை இலங்கைக் கடற்படை தாக்கி அழித்தது. விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்ட பிரபாகரன் 2008 இல் கே.பி. பக்கம் திரும்பி ஏதாவது செய்யுமாறு கோரினார். இளைப்பாறல் நிலையில் இருந்து மீண்ட கே.பியினால் கடுமையான முயற்சியின் மூலம் மூன்று ஆயுதக் கப்பல்களை அனுப்பி வைக்க முடிந்தது. அவற்றில் ஒன்று இலங்கைக் கடற்படையால் வழிமறிக்கப்பட்டபோதும் மற்றைய இரண்டும் புலிகளை எட்டியதன் மூலம் புலிகளுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட உயிர்வாயுவை அந்த அமைப்புக்கு வழங்கின.
இதனால் நன்றி உணர்வுடன் கே.பியை மீண்டும் புலிகள் இயக்கத்தில் சேருமாறு கோரினார் பிரபாகரன். தன்னை வெளிநாட்டு புலிகள் அமைப்புக்குப் பொறுப்பானவராகப் புலிகளின் தலைமை நியமிக்குமானால் புலிகள் இயக்கத்தில் மீண்டும் சேரத் தாம் தயார் என்று பத்மநாதன் கூறினார். அதன் பிரகாரம் 2009 ஜனவரியில் "சர்வதேச உறவுத் துறை" என்ற தனிப்பிரிவு புலிகள் அமைப்பில் உருவாக்கப்பட்டு செல்வராசா பத்மநாதன் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பனிப்போர்
புதிய சர்வதேச உறவுப் பிரிவின் தலைவர் பொறுப்பு என்பது நடைமுறையில் பார்த்தால் புலிகளின் பூகோளத் தலைவர் பதவிக்கு நாசூக்காக ஒப்பானதாகும். குறைந்தபட்சம் அப்படித்தான் அதனை கே.பி. வரைவிலக்கணப்படுத்திக்கொண்டார். ஆனால், புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாகவிருந்த காஸ்ட்ரோவோ தமது கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க இணங்கவில்லை. கே.பிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என வெளிநாட்டுக் கிளைகளை அவர் பணித்தார்.
இது, புலம்பெயர்ந்தோர் மத்தியில் கே.பி. மற்றும் காஸ்ட்ரோ விசுவாசிகளிடையே "பனிப்போர்" உருவாக வழி செய்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று உதவி அரச அதிபர் பிரிவுக்குள் கடைசிக் கட்டமாகப் புலிகள் முற்றுகைக்குள் சிக்குண்டிருந்தமையால் இந்தப் பனிப்போர் விவகாரம் பிரபாகரனின் போதிய கவனத்தை எட்டவில்லை. இதனால், காஸ்ட்ரோவினால் தாம் விசனத்துக்கு உட்படுத்தப்படுகின்றார் எனக் கே.பி. கருதினார்.
கொழும்பு மீது சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மோதல் நிறுத்தம் ஒன்றை எட்டச் செய்யும் நகர்வுகளில் கே.பி. தாமே தீவிரமாக ஈடுபட்டார். சர்வதேச தரப்புகளின் ஆதரவுடன் பிரபாகரனும் புலிகளின் ஏனைய பல தலைவர்களும் தங்களின் குடும்பத்தவர்களுடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடும் ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்தவும் அவர் முயன்றார். ஆனால் கடைசி நேரம் வரை அதற்கு இணங்க பிரபாகரன் மறுத்தார். ஆனால் புலிகளின் தலைவர் இவ்விடயத்தில் தமது மனதை மாற்றிக்கொண்ட போது, அதற்கான காலம் கடந்துவிட்டிருந்ததுது.
இதேசமயம், தற்காலிக ஓய்வு ஒன்றுக்கு இலங்கையைத் தள்ள வைக்கும் வகையில் சர்வதேச ஆதரவைத் திரட்டும் நோக்கத்துடன் கே.பி. கையாண்ட இராஜதந்திர நகர்வுகள் காஸ்ட்ரோவினாலும் அவரது நீசர்களாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.
இலங்கையில் மனிதாபிமானத் தலையீடுகளை உடன் முன்னெடுக்கும்படி மேற்குலகைக் கோரும் வகையில் மேற்கு நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு வெளிநாட்டில் உள்ள புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் கே.பி. கோரினார். அப்பாவி மக்களின் மனிதப் பேரவல நிலைமையை முன்னிலைப்படுத்துமாறு அவர் வேண்டினார். மேற்கு நாடுகளின் கவனத்தைத் திருப்பும் வகையில் தாம் எடுக்கும் முயற்சிக்கு வலுவூட்டவே இதனை மேற்கொள்ள அவர் வேண்டினார்.
ஆனால், கே.பியின் எத்தனங்களை முறியடிக்கத் தீர்மானித்த அவரது வைரியான காஸ்ட்ரோவோ, விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு புலம் பெயர்ந்த தமிழர்களைப் பணித்தார். புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளையும் பிரபாகரனின் படங்களையும் தாங்கி வெளிப்படத் தொடங்கினர். இதைப் பார்த்து மேற்கு நாடுகளின் அரசுகளும் ஊடகங்களும் அதிர்ச்சியில் உறைந்தன. இதன் மூலம் புலம்பெயர் புலிகள் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டனர் கால்களில் அல்ல, தங்கள் தலைகளிலேயே.
யுத்தம் தீவிரமடைந்ததால் வன்னிக்கும் வெளிநாட்டில் இருக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் நெருக்கடிக்குள்ளாகின. எனவே, காஸ்ட்ரோ தம் சார்பில் சர்வதேசப் பிரதிநிதி ஒருவரை நியமித்தார். இந்த நபர், புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகளைக் கவனிக்கவேண்டியவராக இருந்தார்.
நெடியவன்
காஸ்ட்ரோவின் பிரதிநிதியாக வந்தவர் 33 வயதுடைய பேரின்பநாயகம் சிவபரன். "நெடியவன்" (உயரமானவன்) என்ற புனை பெயர் இவருடையது. நெடியவன் தமது 18 ஆவது வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். மேற்படிப்புக்காக புலிகள் இவரை ரஷ்யாவுக்கு அனுப்பினர். எனினும் சந்தர்ப்பவசமாக சிவபரன் தமது பட்டப்படிப்பை அங்கு பூர்த்தி செய்யவில்லை.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் செயற்பட்ட நெடியவன், தாய்லாந்தில் இடம்பெற்ற நான்காவது சு ற்று அமைதிப் பேச்சின்போது தமிழ்ச்செல்வனுடன் உடன் சென்றார். அதன் பின்னர் அவர் ஐரோப்பாவில் காலூன்றினார்.
2002 முதல் 2005 வரையான அமைதிப் பேச்சுக் காலத்தில் புலிகள் அமைப்பு தனது செயற்பாட்டாளர்கள் பலரை மேல்நாட்டுக்கு அனுப்பியது. இவர்களில் பெரும்பான்மையானோர் புலிகளின் அரசியல்பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். நெடியவன் நோர்வேயை வாசமாகக் கொண்டார்.
நெடியவன் என்று அழைக்கப்படும் சிவபரன், சிவகௌரி சாந்தமோகனைத் திருமணம் செய்தார். அவரின் (சிவகௌரியின்) தந்தையின் சகோதரர்தான் ரஞ்சன் லாலா என்று அழைக்கப்படும் ஞானேந்திரமோகன் ஆவார். ஞானேந்திரமோகன் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் மட்டுமன்றி பிரபாகரனின் பெரும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கியவரும் கூட. யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் செ ன்றுகொண்டிருந்த சமயம் ரஞ்சன் லாலா இராணுவத்தினரால் சுடப்பட்டார்.
இந்தத் திருமண சம்பந்தம் புலிகள் அமைப்புக்குள் நெடியவனின் நிலையை ஸ்திரமாக்கியது. காஸ்ட்ரோ வழங்கிய அதிகாரத்தையும் சேர்த்துக்கொண்ட அவர் அதை வைத்துக் கொண்டு, புலிகளின் உலகளாவிய தலைவராக வரும் கே.பியின் முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தத் தொடங்கினார்.
புலிகளின் இராணுவத் தோல்விக்குப் பின்னர் வெளிநாட்டில் இந்தப் பனிப்போர் பகிரங்கமாக வெளிப்படத் தொடங்கியது. அதேசமயம், காஸ்ட்ரோ முள்ளிவாய்க்காலில் தற்கொலை செய்துகொண்டார்.
தலைமைத்துவம்
யதார்த்தத்தில் நடந்தேறியவை அனைத்தும், புலிகளின் கட்டமைப்பில் அதன் வெளிநாட்டுப் பிரிவு மட்டுமே செ யல்திறனுடையதாக எஞ்சும் நிலையை உருவாக்கின. எனவே, இந்த வெளிநாட்டுப் பிரிவுகளின் தலைவரே "புலிகளின் பிரபாகரன்" என்ற தலைமைக்கு யதார்த்தத்தில் ஒப்பானவர் என்றாகும் சூழல் ஏற்பட்டது.புலிகளின் தலைமை மாடத்தை அலங்கரிக்க கே.பி. முயன்றபோது நெடியவன் அதனை எதிர்த்தார். கே.பிக்கு எதிரான வெளிநாட்டில் வதியும் உதிரிகளான சில புலிகளின் ஆதரவு இவ்விடயத்தில் நெடியவனுக்குக் கிட்டியது.
கே.பி. எதிர்ப்பு அணி, அவருக்கு எதிராக விஷமத்தனமான துவேஷமிக்க வசைபாடும் பிரசாரத்தை ஆரம்பித்தது. ஒருபுறம் பிரபாகரனை ஆயுதப் படைகளிடம் காட்டிக் கொடுத்தவர் என்றும், மறுபுறம் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற உண்மையை மறைக்கின்றார் என்றும் கே.பி. மீது குற்றம் சுமத்தப்பட்டது. பல்வேறு சர்வதேச உளவுப் பிரிவுகளிடம் வேதனம் பெறுபவராகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
புலிகளின் கப்பல்கள் பற்றிய உளவுத் தகவல்களை இலங்கைக் கடற்படைக்கு வழங்கியவரே கே.பிதான் என்றும் கூட கதைகள் பரவவிடப்பட்டன.
கே.பி. மற்றும் அவரது நன்னடத்தை பற்றிய விடயங்கள் வயதான தலைமுறையின் விடயமறிந்த பிரிவினருக்கு நன்கு தெரியும் என்றாலும், வெளிநாட்டில் உள்ள புலிகளின் இளம் தலைமுறையும், புலம்பெயர் ஆதரவாளர்களும் அவர்பற்றி அறிந்தவை சொற்பமே. எனவே, இது, அவருக்கு எதிரானவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பானதாக அமைந்தது.
புலிகளின் வெளிநாட்டு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் நெடியவனின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் கே.பிக்குத் தனது கருத்துகளை சரிவரப் பரப்புரை செய்வது சாத்தியமற்றதாக அமைந்தது. பெரும்பாலும் புலிகளின் ஊடக நிறுவனங்கள் கே.பியை இருட்டடிப்பு செய்த அதேசமயம், வேறு பல ஊடகங்கள் கே.பி. மீது வசைமாரி பொழிந்து தள்ளின. தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகத் தனது சொந்த இணையத் தளத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டத்துக்கு கே.பி. தள்ளப்பட்டார்.
பின்னடைவு
புலிகளின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களான நெடுமாறன், வைகோ போன்றோரின் போக்கு, கே.பிக்குப் பெரும் பின்னடைவைத் தந்தது. கே.பி. தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காகத் தொலைபேசியில் நீண்டநேரம் செலவிட வேண்டி நேர்ந்தது என்றும் கூறப்படுகின்றது. இணங்குபவர்கள் போல அவர்கள் காணப்பட்டாலும், அவர்கள் கே.பியைப் பகிரங்கமாக விமர்சிப்பதிலும் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற நிலைப்பாட்டைப் பின்பற்றுவதிலும் மாறாதவர்களாக இருந்தார்கள்.
பிரபாகரன் பாதுகாப்பான இடத்தில் உயிருடன் உள்ளார் என்று மே 18 ஆம் திகதி, ஆழச் சிந்திக்காமல் அவசரமாக கே.பி. விடுத்த அறிவிப்புத்தான் அவருக்குப் பலவீனத்தை ஏற்படுத்தியது.பின்னர், தமது நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டார். எனினும், அவர் முதலில் ஏன் அப்படி அறிவித்தார், பின்னர் ஏன் அதை மாற்றிக்கொண்டார் என அவர் மீது குறைகாண்போர் கேள்வி எழுப்புகின்றனர்.
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற விவகாரத்தில் கே.பியின் எதிர்ப்பாளர்கள் ஆரம்பத்தில் முன்னிலை பெற்றனர். பெரும்பான்மையான ஆதரவாளர்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளாமையாலும் அல்லது பிரபாகரன் மரணமடைந்து விட்டார் என்பதற்கு இணங்க முடியாமையாலும், இவ்விடயத்தில் பரந்தளவிலான மறுப்புகள் வெளியாகின.
இந்தக் கருத்து நிலைப்பாட்டுக்கு மத்தியில், பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்றும், அதற்காக ஒருவார காலம் துக்கம் அனுஷ்டிக்கும்படியும் கே.பி. விடுத்த பிரகடனம் எதிர்ப்புப் பிரதிபலிப்புகளை உருவாக்கியது. கே.பி. எதிர்ப்பு மூலங்கள், பத்மநாதனின் அந்த அறிவிப்புடன் இணங்கிப்போக மறுத்தன.
அதன் விளைவாகவே, இற்றைவரை பிரபாகரனுக்கோ, புலிகளின் ஏனைய சிரேஷ்ட தலைவர்களுக்கோ வணக்க மரியாதை செய்யும் பகிரங்க நிகழ்வுகள் ஏதும் இடம்பெறவில்லை. மரணித்த மாவீரர்களைப் பூஜித்து, அதி உச்ச கௌவரம் அளிக்கும் விதத்தில் "மாவீரர் தினத்தை" அனுஷ்டிக்கும் ஓர் இயக்கத்தில்தான் இப்படி நடந்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் உட்குழு மோதல்கள், வித்தியாசமான கருத்து நிலைப்பாட்டைப் பகிரங்கமாகவே பிரதிபலித்து வெளிப்படுத்தி நிற்கின்றன.பிரபாகரனும் ஏனைய சிரேஷ்ட தலைவர்களும் இனி இல்லை என்ற உண்மையை ஏற்று, அவர்களைப் போற்றி, முன்னோக்கி நகர்வோம் என்று கே.பியும் அவரதுஆதரவாளர்களும் கூறுகின்றனர். ஆனால் கே.பியை எதிர்ப்பவர்களோ தமது தலைவர் இல்லை என்பதை ஏற்க மறுக்கின்றனர்.
கே.பியும் அவரது குழுவினரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டமைப்பு மாற்றத்துக்கு உட்படுத்த விரும்புகின்றனர். (தேவையின்) அவசியத்தை நேர்மையுடன் புரிந்துகொண்டு, இனிமேல் ஆயுதப் போராட்டம் தொடர முடியாது என்கின்றனர். இந்தப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் மூலம் வன்முறையற்ற ஜனநாயக வழி மூலம் முன்னெடுக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், பெரும்பாலான கே.பி. எதிர்ப்பு மூலங்களோ யதார்த்தத்தை ஏற்க மறுத்து, ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது குறித்து வாய்ச்சவடாலில் ஈடுபட்டுள்ளன.
தொடரும் - நன்றி: உதயன்