-
ஜிஹாத், அல்பத்தாஹ், புலிகள், சங்கிலியன் படை. - யஹியா வாஸித் -
புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும், இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.
1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்குமாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள் குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.
நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓல்ஆர் பிறதர்ஸ்.
புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடி வெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்கா மாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள். மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடிக் கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓல்ஆர் கசின்.
வீடு கட்ட வேண்டும். புது வீடுகட்ட நிலம் பார்க்க, நிலக்கால் நாட்ட தமிழ் சாத்திரிமாருக்கிட்டத்தான் அத்தனை காக்கா மாரும் போவார்கள். கிழக்குமாணத்தில் உள்ள 90 வீதமான முஸ்லீம்களின் வீடுகள் 1983க்கு முதல் தமிழ் சகோதரர்களால்தான் கட்டப்பட்டது. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உதவுவது போல் செய்வார்கள். எஸ் வீ ஓல் ஆர் சேம் பிளட்.
ஆம் தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்கள் வரும். கல்முனை காக்கா மாருக்கும், நற்பிட்டிமுனை தமிழ் சகோதரர்களுக்கும், அக்கரைப்பற்று காக்கா மாருக்கும், பனங்காடு, கோளாவில் தமிழ் சகோதரர்களுக்கும், காத்தான்குடி காக்காமாருக்கும், ஆரப்பத்தை தமிழ் சகோதரர்களுக்குமிடையில் இரண்டு வருடத்துக்கொரு முறை இனக்கலவரம் வரும். இது திட்டமிட்ட புத்திஜீவிகளால் உருவாக்கப்படும் இனக்கலவரம் அல்ல. நேற்று இரவு தென்னங்கள்ளையோ அல்லது வடிசாராயத்தையோ அருந்தியவர்களால் உருவான இனக்கலவரம். முதல்நாள் இரண்டு பகுதியிலும் இரண்டு பேரின் செவியை (காது) அறுப்பார்கள். அடுத்தநாள் இரண்டு பகுதியிலும் கொஞ்சம் சோடா போத்தல் பறக்கும். மூன்றாம் நாள் அப்பகுதி பொலீஸ் அதிகாரி இருபகுதியிலும் கோயில் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்களை அழைத்து. ஓகே. இன்றிலிருந்து சமாதானம் சரியா என்பார். இருதரப்பாரும் தலையாட்டுவர். பகல் ஒரு மணிபோல் போலீஸ் வண்டியில் ஸ்பீக்கர் கட்டி. சரி இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டது. நாளை கடை திறக்கலாம், பாடசாலைக்குப் போகலாம், எல்லாம் வழமை போல் இயங்கும் என்பார்கள். டண். இரண்டு பகுதியிலும் போத்தல் எறிந்த குறுப்புகள் அன்று பின்னேரமே சாறாட ( சிங்கள சகோதரர் ) கொட்டிலில் சோமபானம் அருந்திக் கொண்டிருப்பர். எஸ் வீ ஓல் ஆர் சக்களத்திகள்.
இந்த சக்களத்தி சண்டைகளையும், நண்பர்கள் சண்டையையும். மச்சான் மச்சினன் சண்டையையும் ஊதிப்பெருப்பித்த புண்ணியம் கிழக்கு மாகாணத்தில் 1979ல் வீசிய புயல், வெள்ளத்தையே சாரும். அன்று கிழக்கில் மருதமுனை, நீலாவணை, சின்னக்கல்லாறு, பெரிய கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, பெரிய போரதீவு, கோயில் போரதீவு போன்ற இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டது. இப்பகுதி முழுக்க முழுக்க தமிழ் சகோதர, சகோதரிகள் வாழும் பகுதிகள். உடனடியாக அன்று பிற்பகலே பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையுள்ள முஸ்லீம் இளைஞர்கள் புஸ்பைக்கிலிலும், கால்நடையாகவும் சென்று அவர்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார்கள். செய்தோம். ( இப்போதும் வன்னி புனிதர்களுக்கு, சட்டி பானையுடன் ஓடிப்போய் முதல் சோறு போட்டவனும் இந்த காத்தான்குடி சோனிகள்தான். திஸ் இஸ் இஸ்லாம். வட் ஹெப்பன் ரு வணங்கா மண். தற் இஸ் பக்கா கெப்பிற்றலிஷம். தற்ஸ் வை ரூ லேட் போர் எவ்ரிதிங் ) அப்போது, ஒருவாரத்தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றொம் பேர்வழி எனக்கூறிக் கொண்டு வந்து, உதவியுடன் உபத்திரவத்துக்கும் பிள்ளையார் சுழிபோட்டார்கள்.
அடியாத மாடு படியாது, அடி உதவுகின்றாப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான், யாமிருக்கப் பயமேன் என ஆரம்பித்து, எங்களை, ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களை, கொத்தி கூறு போட்டு, கொத்து பராட்டா போட்டு, கொக்கரித்து, கொந்தளிக்க வைத்து, டேய் காக்கா வாறான், காக்கா வாறான் கதையை நிற்பாட்டு, ஏதோ றெக்கி எடுக்கத்தான் வாறான் என்ற அளவுக்கு எங்கள் நண்பர்களை, எங்களுடன் வாழ்ந்தவர்களை, எங்களுடன் ஒன்றாக உறங்கியவர்களை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, திரும்பவும் ஆட்ட நினைக்கின்றீர்களே, இது தகுமா, இது தருமமா. கோவலனை கண்ணகி மாதவி விடயத்தில் மன்னிக்கவில்லையா, நடுக்காட்டில் தன்னை விட்டு விட்டு ஓடிய நளனை தமயந்தி மன்னிக்கவில்லையா, தன்னை வைத்து சூதாடிய அயோக்கியன் தருமனை பாஞ்ஞாலி என்ற பதிவிரதை மன்னிக்கவில்லையா. பிளீஸ் எங்களை கொஞ்சம் பழையபடி சேர்ந்து வாழத்தான் விடுங்களேன். வீ ஆர் ஸ்ரில் திங்கிங் எபவுட் அவர் ஓல்ட் கல்ச்சர்.
1981இல் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறூக். வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் அலைந்து திரிந்தார். அச்சமயங்களில் இவர் யாழ்பாணத்திலுள்ள டவுண் பள்ளி வாசலில்தான் ( இப்போதைய ஈபிஆர்எல்எப் ஒபீஸ் அருகில் உள்ள பள்ளி வாசல் ) தங்கினார். ஒரு சில நாட்கள் சுபாஸ்கபேயில் வேலையும் செய்தார். பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு கூவி விற்கும் வியாபாரியுடன் சேர்ந்து சிறு சிறு வியாபாரம் செய்தார். 1982 கடைசியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில ஈபிஆர்எல்எப் முஸ்லீம் இளைஞர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பள்ளியில் தங்கியிருந்தார். அப்போது இவர் ஈபிஆர்எல்எப் இல் இணைய முயற்சி செய்தார். இவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஐந்து சந்தியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்தார்.
அதன் பின் இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், புலிகள் இயக்கத்தவருமான கெப்டன் நரேஷ் ( இவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றார் ) அவர்களூடாக 1984 முற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இவரது வேகமான வளர்ச்சி, இறைச்சிக்கடை அனுபவம் புலிகளை மலைக்க வைத்தது. இவரது வெட்டுக்குத்துகளைப் பார்த்த கிட்டண்ணா இவரை தனது மெய்பாதுகாவலராக இணைத்துக் கொண்டார். ஒருசில நேரங்களில் இவரது வளர்ச்சியில் லெப்.கேணல்.ராதாவுக்கு, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு மன உளர்ச்சி, தளர்ச்சி இருந்தது. ஆம் அது 07-01-1987ல் சிங்கள கூலிப்படை கொன்றது என்ற பெயரில் பிற்பகல் 5.55க்கு கே.கே.எஸ்.வீதியில் ராதா தலைமையில் அரங்கேறியது. அக்கரைப்பற்று ( அக்கு, ஆர், அரை, பற்று )பெற்றெடுத்த ஒரு மறவன் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தானடா, கர்ணா எய்தவன் கர்ணனடா, கர்ணா எய்தவன் ராதாவடா. இது பாறூக்கின் சரித்திரத்தில் ஒரு துளி.
முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் இரண்டாவது மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை படித்து, ஏஎல் யாழ். மகஜனாவில் படித்தவர். 1983 ஆரம்பத்தில் பரீட்சை முடிவை எதிர்பார்த்து அக்கரைப்பற்றில் இருந்தார். அப்போது 1983 ஜூலை கலவரம் வெடித்து, குட்டிமணி, தங்கத்துரை எல்லாம் பனாகொடையில் கொல்லப்பட, தமிழ் சிறைக்கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட, அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லீம் இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் சேர்ந்து 1983 செப்டம்பரில் திருக்கோவில், தம்பிலுவில் கிராமங்களில் பொதுமக்களின் ஆயுதங்களை கொள்ளையிட்டார்கள். சிலதை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் பெற்றார்கள்.
அப்போது, முஸ்லீம் இளைஞர்கள் இந்த மொகமட் ராபியையும் அந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்கள். முகமட் ராபி பங்கு பற்றிய முதல் நிகழ்வு இது. அதன் பின் இவர் பல முறை ஈபிஆர்எலஎப் இல் இணைய முயற்சித்தார். அப்போது இந்திய அரசும், இந்திய ரோவும் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க முன் வந்திருந்தது. இச்செய்தி பத்மநாபா ஊடாக முதல் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த வாரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து 67 இளைஞர்கள் அனுப்பப்பட்டார்கள். இதில் இந்த முகமட் ராபியும் ஒருவர். இவர் ஒருவர்தான் முஸ்லீம் இளைஞர். யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எப்புக்கு அப்போது பொறுப்பாக இருந்த தோழர்கள் அவரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மற்றவர்களை மயிலிட்டி ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆம் தடங்கல் அப்போதே ஆரம்பித்து விட்டது. என்றாலும் அப்போது ஈபிஆர்எல்எப்பில் கிழக்கு மாகாணத்தில் எடுபிடியாக இருந்த ஒருவரின் ( எல்லா இயக்கங்களுமே முஸ்லீம்களை எடுபிடியாகத்தான் பாவித்தார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ) நச்சரிப்பில், அவரே நேரடியாக யாழ். வந்து தோழர்களை உண்டு இல்லை என பண்ணி, முகமட் ராபியை மயிலிட்டியில் படகில் ஏற்றிக்கொண்டு வேதாராண்யம் ஊடாக மெட்ராஸ் சூழைமேடுவரை வந்து ராபியை, நாபாவின் ஆசீர்வாதத்துடன் உத்தரப்பிரதேசம் அனுப்பி வைத்தார்.
1984 பெப்ரவரிக்குப் பின் கிழக்கு கிழக்காக இல்லை. தடி எடுத்தவன், தண்ணி அடித்தவன், மச்சான் போட்டு பேசியவன், படலைக்குள் புகுந்து மையிறு புடுங்கியவர்கள் எல்லோரும் தடியுடன் இருந்தார்கள். இது கொஞ்சம் வித்தியாசமான தடி. இவனை பார்த்தால் கோழிக் கள்ளன் போல் இருக்கின்றான் மச்சான். போடு, போடு போட்டுத்தள்ளு என போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சகோதரர்கள், ஒன்றாக எங்களை செக்கண் சோவுக்கு அழைத்துச் சென்றவர்கள், வா மச்சான், வாடா காக்கா என அன்பாக அழைத்த நண்பர்கள். வாடா காக்கா என, அடிநாக்கு நாசியையும், தொண்டையையும் ஒட்டுற மாதிரி அழைத்தார்கள். அதில் அன்பில்லை. ஆக்ரோஷம் இருந்தது. பள்ளி வாசல்கள், கடைத்தொகுதிகள், வயல்வெளிகள் எல்லாமே அழிந்து போயின. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் இருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டோம். வேதனைப்பட்டோம். கையில் தடி வைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து சோனிகளும், தமிழனும் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்பட்டார்கள். கஸ்டப்பட்டோம். கூலித்தொழிலாழிகள் ஒரு வேளை உணவுக்கு அல்லாடினர்.
இதில் இரு பகுதியினரையும் குறை சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருந்து திட்டமிட்டு செய்தார்கள். மூஸ்லீம் இளைஞர்கள் எவ்வித ஆயுதமயப்படுத்தலுமின்றி கூட்டம், கூட்டமாக சென்று சில அநாகரிக செயல்களை அரங்கேற்றினர். இதற்கு அரசும் பின்னால் நின்று நெய்யூற்றியது. இவற்றின் உச்சக்கட்டம்தான் சிறிலங்காவில் ஜிஹாத் அமைப்பு தோன்ற வழி வகுத்தது. ஆம் 1984 ஜூன் 17ல் ஜிஹாத் உருவானது. முழு சிறிலங்காவிலுமிருந்து 40 நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் அது தொடங்கியது. காலி கோட்டை, வேருவளை தொடங்கி யாழ். நயினாதீவு வரையுள்ள மனிதாபிமானிகளின் உளப்பூர்வமான செயல்பாட்டுடன் அது தொடங்கியது.
அது அக்கரைப்பற்றில்தான் உருவானது. உருவாகி அடுத்த தினமே நாடுமுழுக்க துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் வினியோகித்தது. நாங்கள் ஆள வந்தவர்களல்ல. வாழவந்தவர்கள். பிளீஸ் எங்களை விட்டுடுங்கோ என கரம் கூப்பி சகோதர இனங்களை மன்றாடியது. அதன் பின், இனி எம் பகுதியில் நடக்கும் அத்து மீறல்களை நாங்கள் தட்டி கேட்போம் என சிறிலங்கா முழுக்க பறை சாற்றியது. அதன் பின் நடந்த, ஆள் கடத்தல், வரி, கப்பம், கொலைகளுக்கெல்லாம் ஜிஹாத் உரிமையுடன் நடவடிக்கை எடுத்தது. 1985 இல் பயிற்சி முடித்துக் கொண்டு முகமட் ராபி சிறிலங்கா வந்து திருக்கோயில் பகுதியில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தங்கியிருந்தார். இவரும் ஜிஹாத்துடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் இவரை திருக்கோவிலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த ஒரு தமிழ் அமைப்பு முடிவெடுத்து, இவரை சங்கிலியால் கட்டி 1985 ஜனவரியில் ஒரு கொரளா காரில் கடத்திச் சென்றார்கள். ஆம் ஜிஹாத் அமைப்பின் ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், எவ்வித சிராய்ப்புமின்றி முகமட் ராபி நிந்தவூர் பிரதான வீதியில் ஒரு அதிகாலைப் பொழுது மீட்கப்பட்டார். திஸ் ஒப்பரேஷன் புறம் சிறிலங்கன் ஜிஹாத்.
அன்று முதல் அவர் ஜிஹாத் அமைப்பின் இராணுவ தளபதியாக செயல்பட்டார் ( இவர் எக்காலத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை ). ஜிஹாத் அமைப்பின் வளர்ச்சி கண்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி நேரடியாக இவர்களை அழைத்து, இரண்டு மூன்று பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஆயுத உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆம் பயிற்சியும் வளங்கப்பட்டது. ஜிஹாத் பல முறை புலிகளுடன் அக்கரைப்பற்றிலும், காரைதீவிலும், மூதூரிலும் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. ஜிஹாத் அமைப்பின் மிக, மிக பொறுப்பானவர்கள் எவ்வித உயிரச்சமுமின்றி புலிகள் சொன்ன இடங்களுக்கு சென்று பேச்சு வார்த்தைகள் நடாத்தியுள்ளனர். பேச்சு வார்த்தைகளுக்கு சென்றவர்களை கடத்த முயன்னற போதும், வார்த்தை ஜாலங்களால் தப்பி வந்ததுமுண்டு.
ஆம் 1985 மே 21ம் திகதி இரவு 7.15க்கு ராபி கிழக்கு மாகாண ஈரோஸ் அமைப்பினரால் நெஞ்சில் 27 துப்பாக்கி சன்னங்கள் விளாச சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவ்விளைஞர் கடந்த 12 வருடங்களாக பிரான்சில் இருந்து, போன வருடம் இங்கிலாந்துக்கு மலையேறியுள்ளார் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ளலாம். அக்கொலைக்கு கட்டளை இட்டவர் இப்போது முஸ்லீம் சகோதரர்களுடன் வியாபாரங்கள் செய்கின்றார். ஆம் மன்னிப்பை விட உயர்ந்த பண்பு இந்த உலகத்தில் வேறு என்ன மண்ணாங்கட்டி இருக்கின்றது.
இந்த ஜிஹாத் அமைப்பு அரசு செய்த சில கூலிக்கு மாரடிக்கும் வேலைகளை செய்ய மறுத்தது. ஆம் சகோதர இனத்தை இரத்த வெறி கொண்டு தாக்குவதை ஜிஹாத் குழுவினர் அங்கீகரிக்க மறுத்ததின் பயனாய், அரசு கட்டாக்காலிகளை அழைத்து துப்பாக்கிளை கொடுத்து என்னென்னவோ செய்ய தூண்டியது. கூலிக்கு மாரடிக்கும் அக்குழு நிறைய செய்தது. அவை அனைத்தும் ஜிஹாத் அமைப்பின் தலையில் கட்டப்பட்டது. ஆம் இவ்வாறு ஒன்று நடந்தால் எப்படி சமாளிப்பது என ஜிஹாத் அமைப்பினர் ஆரம்பத்திலேயே திட்டமிட்டனர். ஆம். ஜிஹாத் அமைப்பிலிருந்து பலர் மறைமுகமாக தெரிவு செய்யப்பட்டு, அல்பத்தாஹ் என்ற அமைப்பு கட்டப்பட்டது. இதுவும் 1984 ஒக்டோபரில் உதயமானது. அல்பத்தாஹ். நிறைய மார்க்க , சன்மார்க்க பணிகள் மற்றும் விதவைகளுக்கு உதவுதல், நோயாளிகளுக்கு, பாடசாலைக்கு செல்ல வழியில்லாதவர்களுக்கு உதவுதல் எனவும் செயல்பட்டதுடன், சில நாகரிக நடவடிக்கைகளிலும் இறங்கியது. ஆம் 1985 மே 21ல் சுட்டுக் கொல்லப்பட்ட ராபியின் ஞாபகார்த்தமாக, அக்கொலைக்கு துணைபோன சகலரையும் 1985 ஜூன் 21 இரவு 7.15 க்கும், 1986 மே 21 இரவு 7.15 க்கும் கழுவிலேற்றியது. இறுமாப்புடன் உரிமையும் கோரியது.
ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்கா முழுக்க ஒண்ணரை லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியது. அல்பத்தாஹ் என்ற தலைப்பில், அல்லாஹ் அக்பர், அல்பத்தாஹ் அமைப்பின் இராணவத் தளபதியும், முகமட் ஹாசீம் அவர்களின் மகனுமான முகமட் ராபி, 1985-05-21 இரவு 7.15 க்கு தமிழ் பயங்கர வாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரம் ராபிக்கள் உருவாக வழி வகுத்துள்ளனர் என்பதை, மிக, மிக பெருமையுடன் அறியத்தருகின்றோம். அல்பத்தாஹ், மத்திய செயற்குழு என நாலுக்கு நாலங்குலத்தில் அது வெளியாகி அரபு நாட்டு எம்பஸிகளின் கதவுகளையும் தட்டியது.
1985 மே 21 ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்காவின் முழு பாதுகாப்பு தலைமைகளும் அக்கரைப்பற்றில் நின்றன. அம்பாரையில் இருந்தும், கொண்டைகட்டுவான் இராணுவ முகாமில் இருந்தும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாராகுங்கள். அழியுங்கள் தமிழர்களின் குடியிருப்புக்களையும், வரலாறுகளையும் என்றார்கள். ஆம் உடனடியாக ஜிஹாத், அல்பத்தாஹ் பொறுப்பாளர்கள் கூடி இது தருணமல்ல, இது பொருத்தமுமல்ல, இது நாகரிகமும் அல்ல என முடிவெடுத்தார்கள். அரசுடன் ஒத்துழைப்பதில்லை என ஒரு சேர அத்தனை மத்திய குழு உறுப்பினர்களும் முடிவெடுத்தார்கள் ( சம்மாந்துறையைச் சேர்ந்த, மறைந்த அன்வர் இஸ்மாயீல் எம்பி அவர்கள் அல்பத்தாஹ் அமைப்பில் மத்திய செயற் குழு உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவர் என்பதை இங்கு பெருமையுடன் சொல்லலாம். ) பாதுகாப்பு பிரிவும், கொஞ்சம் ரத்தம் துடிப்பவர்களும் எவ்வளவோ தலையணை மந்திரங்கள் ஓதினார்கள். ஆனால் அன்பு, மனிதாபிமானம், பொறுப்புணர்ச்சி, எதிர்காலம் என்பதில் முழு நம்பிக்கை கொண்ட சிறிலங்கா ஜிஹாத் அமைப்பு, எய்தவனிருக்க அம்பை நோக வைக்க விரும்பவில்லை. ஆனால்,
ஆயுதம் தருகின்றோம், கொழுத்து முஸ்லீம்களின் பள்ளிவாசல்களை என்றதும் கொழுத்தியவர்களும், ஆயுத கப்பலே அனுப்புகின்றோம் விரட்டு சோனிகளை என்று இஸ்ரேல் சொன்னதும் ஒரு மாவட்ட முஸ்லீம்களின் வரலாறையே அழிக்க முற்பட்டவர்கள்தான் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அமைப்பு ரீதியாக செயல்பட்ட எந்த முஸ்லீம்களும் எக்காலத்திலும் கூலிக்கு மாரடிக்கவில்லை. மாரடிக்கவும் மாட்டான். தற் இஸ் இஸ்லாம்.
இந்த அல்பத்தாஹ் அமைப்பின் செயல்பாடுகளில்தான் அனைவரும் அக்காலங்களில் கவனம் செலுத்தினர். யார் இவர்கள். எங்கிருந்து தொழில்படுகின்றார்கள் என கண்ணுக்குள் விளக்கெண்ணை போட்டு தேடினார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் பிற்காலங்களில். ஓ இப்படியும் ஒரு ஆள்மாறட்டம் செய்யலாமோ என தோன்றிய சங்கிலியன் படை. ஆம் 1991 முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியதும், முஸ்லீம்களின் வீட்டுத் தொகுதியொன்றை விடுதலைப்புலிகள் தமது அச்சகமாக பாவித்தார்கள். அந்த அச்சகத்துக்கு வே.பிரபாகரன் அவர்கள் வந்து போவது வழமை. ஆனால் ஒரு நாள் தலைவர் வந்து ஒரு முக்கால் மணி நேரத்தின் பின் வெளியேறி இரண்டு நிமிடத்தில் அவ் அச்சகம் வெடித்துச் சிதறியது. அதற்கும் இந்த அல்பத்தாஹ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற போர்வையில், யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அக்காலங்களில், தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்த முஸ்லீம் சகோதரர்களை இந்த சங்கிலியன் படை வறுத்தெடுத்ததாகவும் அப்போது பட்சிகள் பேசிக்கொண்டன.
இப்போது சிறிலங்காவில் ஜிஹாத் இருக்கிறதா, இயங்குகின்றதா என்பதுதான் அனைவரின் கேள்வியும். ஜிஹாத் என்பது வாழ்க்கையுடன், வாழ்க்கைக்காக போராடுவது. அடுத்தவனைப் போய் வம்புக்கிழுப்பதல்ல. வம்புக்கிழுக்க இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை. அப்போதைய ஜிஹாத்தை சிலர் வம்புக்கிழுத்து, வம்பில் மாட்டிவிட நினைத்தனர். அதனால் நடப்பது தர்மயுத்தம், தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் ஒரு தர்மயுத்தம், அது தன் வழியில் நடக்கட்டும், நாம் முதலில் எம்மை புடம் போட்டுக் கொள்வோம். இக்கால கட்டங்களில் எம்மிடமும் ஆயுதம் இருந்தால் அது வேறு, வேறு பின் விழைவுகளை ஏற்படுத்தும் என்பதை பல மார்க்க அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் எடுத்துரைக்க, ஜிஹாத், அல்பத்தாஹ் அமைப்புக்களின் பைல்கள் மூடப்பட்டு அனைவரும் 1987 டிசம்பரில் நாடு கடந்தனர். கடந்து, முஸ்லீம்களின் கல்வி, வியாபார விடயங்களில் 100 வீத கவனம் செலுத்தினர். செலுத்திக் கொண்டுமிருக்கின்றனர். அதன் பயன்தான் இன்றைய முஸ்லீம்களின் கல்வி, வியாபார எழுச்சிகளெல்லாம். இல்லாவிட்டால், இன்றைய எமது முஸ்லீம் இளைஞர்கள் எங்கேயோ அகதி அந்தஸ்துக்கு விண்ப்பித்துக் கொண்டிருப்பர்.
இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது. இப்போது அனைவருக்கும் தேவை ஒரு பொருளாதாரப் புரட்சி. அந்தப் புரட்சி வெடிக்க நிச்சயம் சிறிலங்கா ஜிஹாத் கொடிபிடிக்கும். அப்புறம் மகிந்தவின் காதையோ, ரணிலின் காதையோ, சரத்பொன்சேகாவின் காதையோ கடித்து, மானில சுயாட்சியாவது எங்களுக்கு தாங்கோ மக்காள் என கேட்போம். ஒன்று பட்டால்தால் உண்டு வாழ்வு. ( இதில் உள்ள தகவல்கள் எமது உள்ளக் கிடக்கைகளின் ஒரு பனித்துளி அன்பின் பக்ஷீர் காக்கா. இவ்வாறு ஆயிரம் கோடி பனித்துளிகள் வன்னியில் உறங்கிக் கிடக்கின்றன சகோதரர்களே. இனி இவைகளை மறந்துவிட்டு நல்லதோர் உலகம் செய்வோம் )
more
-
சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் அமெரிக்காவில் இன்று நடைபெற ஏற்பாடு: முறியடிக்கும் முழு முயற்சியில் இலங்கை அரசரத்பொன்சேகா இலங்கை புறப்பட்டுவிட்டார் புதன்,பிந்திய செய்திசு-
சரத்பொன்சேகா இலங்கை புறப்பட்டுவிட்டார் புதன்,பிந்திய செய்தி
இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் நடந்த சண்டையின் போது, போர் குற்றங்கள் நடந்ததாக சர்வதேச அளவில் புகார் கூறப்படுகிறது.
போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவம் மற்றும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து 68 பக்க அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்துள்ளது.
மே 2ம் தேதி முதல் 18ம் தேதி வரை இலங்கையில் நடந்த 170 குற்றங்கள் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்து.
சரத்பொன்சேகா தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்ற அவரிடம், இலங்கை அதிபரின் சகோதரரும், ராணுவ செயலருமான கோத்தபையா எந்தெந்த முறையில் போர் விதிமுறைகளை மீறியுள்ளார். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை விளக்கும்படி அமெரிக்க உள்துறை அதிகாரிகள் கேட்டிருந்தனர்.
இது குறித்த இன்று மாலை நடைபெறவிருந்தது.
இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே என்ன விளக்கம் வேண்டுமானாலும் என்னிடம் கேட்கட்டும் அமெரிக்கா. எதற்கு சரத்திடம் கேட்க வேண்டும்’’என்று சொல்லிவந்தார்.
சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று பலரும் பல்வேறு வகையிலும் முட்டுக்கட்டை போட்டார்கள்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஏற்பாட்டில் அமெரிக்காவில் வாழும் ஹெல உறுமயவின் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் சரத் பொன்சேகாவை விசாரிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றையும் நடத்தினர்.
அமெரிக்காவிலுள்ள ஜே.வி.பியினதும், ஜாதிக ஹெல உறுமயவின் பிரமுகர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உதவும் வகையில் சட்ட நிபுணர் குழுவொன்றை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இதையடுத்து பொன்சேகா நேற்று , ’’நான் எனது தேவைகளுக்காக யாரையும் ஏமாற்றமாட்டேன். அதேவேளை நாட்டையும்விட்டுக் கொடுக்கமாட்டேன். எனது தனிப்பட்ட நன்மைகளுக்காக எவரையும் காட்டிக் கொடுக்கமாட்டேன்’’என்று தெரிவித்தார்.
இன்று அவர் விசாரனைக்கு உட்படாமல் அமெரிக்காவில் இருந்து இலங்கை புறப்பட்டுவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகா நாளை அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரவுள்ளார் எனவும், அவரிடம் அமெரிக்கா, இன்று மாலை விசாரணை நடத்தவிருந்த போதிலும் அதனை நிராகரித்துவிட்டு அவர் பயணமாகியுள்ளார் எனவும் இலங்கை வெளியுறவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன
more
-
அகதிகள் வந்த கப்பலில் விடுதலைப் புலிகள் - கூறுகிறது கனடா
வான்கூவர்: 76 இலங்கைத் தமிழர்களுடன் பிடிபட்டுள்ள கப்பலில் விடுதலைப் புலிகளும் இடம் பெற்றுள்ளனர். இவர்களை நாட்டுக்குள் அனுமதித்தால் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்படும் என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் ஓசன் லேடி என பெயரிடப்பட்ட கப்பல் ஒன்றை கனடா அதிகாரிகள் தடுத்துப் பிடித்தனர். அதில், 76 இலங்கைத் தமிழர்கள் இருந்தனர். அனைவரும் ஆண்கள் ஆவர்.
இந்த நிலையில், இந்தக் கப்பலில் இருப்பவர்கள் விடுதலைப் புலிகள் என கனடா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கனடா குடியேற்றப் பிரிவு செய்தித் தொடர்பாளர் பாலா பேபர் கூறுகையில், இக்கப்பலில் உள்ளவர்களில் விடுதலைப் புலிகளும் உள்ளனர்.
அனேகமாக இந்தக் கப்பல் ஆயுத மாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். மேலும், இந்தக் கப்பலில் இருப்பவர்களை கனடாவில் அனுமதித்தால் பாதுகாகப்புப் பிரச்சினை ஏற்படலாம் என்றும் சந்தேகிக்கிறோம்.
இந்தக் கப்பலில் இருந்த இருவரின் உடைகளில் வெடிபொருட்களின் தடயங்கள் காணப்பட்டன என்றார்.
இதற்கிடையே கனடா நாட்டு குடியேற்றத் துறை அமைச்சர் ஜேசன் கென்னியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தீவிரவாதம் அல்லது குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் இந்தக் கப்பலில் இருந்தால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்றார்.
more
-
திருவண்ணமலையில் அந்தரத்தில் பறந்த சித்தர் வீடியோ
தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர ஆலயம் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கு அந்தரத்தில் வானத்தை நோக்கி பறந்த சித்தர் ஒருவரால் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
பஞ்சபூத சிவத்தலங்களில் அக்கினி ஸ்தலங்கமாக போற்றப்படும் இவ் ஆலயத்தில் ஏறாளமான சித்தர்களும் ஜோகிகளும் வாழ்ந்து வருவதாக கூறப்படும் இங்கு திருவண்ணமலை அடிவாரத்தை சுற்றி பக்தர்கள் கிரி வலம் வருவது வழக்கம்.
மின் ஊழியர் ஒருவர் கிரி வல பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலை ஓரமாக இருந்த மரத்தடியில் சடா முடியுடன் இருந்த சித்தர் ஒருவரை கண்டார். அவர் தரையில் அந்தரத்தில் இருப்பதைக் கண்ட அவ்வூழியர் தன்னுடைய கைதொலைபேசியில் அதனை வீடியோ படமாக்கிக்கொண்டுடார். அந்த நேரத்தில் அந்த சித்தர் வானத்தை நோக்கி பறந்து சென்றதை அவர் வீடியோ படமாக்கியுள்ளார்.
more
-
இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதியில் சாமி கும்பிட்டார் மேளதாளம் முழங்க வரவேற்பு: இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்வதாக பேட்டி
இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று திருப்பதியில் சாமி கும்பிட்ட பின் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறினார்.இலங்கை அதிபர் ராஜபக்சே நேபாள நாட்டில் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து விட்டு நேற்று பகல் 2.20 மணிக்கு தனி விமானம் மூலம் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார். அவருடன் மனைவி மற்றும் குடும்பத்தினர், பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 80 பேர் வந்தனர்.
ராஜபக்சே திருப்பதி வருகையையொட்டி இங்குள்ள தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இதனால் ஆந்திர அரசு சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரேணிகுண்டா விமான நிலையத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் ராஜபக்சே செல்லும் வழி நெடுகிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மேளதாளம் முழங்க வரவேற்பு
ரேணிகுண்டாவில் இருந்து கார் மூலம் ராஜபக்சே, பகல் 3.20 மணிக்கு திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது போர் ஓய்ந்ததற்கு பிறகு முதன்முறையாக ராஜபக்சே இந்தியா வந்ததால் அவருக்கு எதிர்ப்பு இருக்கும் என்று கருதி திருமலையிலும் அதிரடிப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஏழுமலையானை தரிசித்தார்
விருந்தினர் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மாலை 4.50 மணிக்கு ராஜபக்சே, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் சென்றார். அங்கு அவர் பயபக்தியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பிறகு கோவிலுக்குள் உள்ள உண்டியலில் அவர் காணிக்கை செலுத்தினார். கோவிலுக்குள் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பேட்டி
ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு மாலை 5.20 மணிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வெளியே வந்த அவரை நிருபர்கள் சந்தித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு நான் திருப்பதி கோவிலுக்கு வந்த போது இலங்கையில் விடுதலைப்புலிகள் பிரச்சினை ஓய வேண்டும், மக்கள் அமைதியாக வாழ வேண்டும், அதற்கு ஏழுமலையான் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினேன். அதேபோல இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான போர் ஓய்ந்து விட்டது. கும்பிட்ட தெய்வம் எங்களுக்கு கருணை காட்டி விட்டது. அதனால் திரும்பவும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தேன். பயபக்தியுடன் சாமி கும்பிட்டேன். தற்போது இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள்.
இவ்வாறு ராஜபக்சே கூறினார்.
அதன்பின்னர் அவர் திருமலையில் இருந்து கார் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.
more
-
அழுவதுதான் அவமானம், அவதிப்படுவது அவமானமல்ல. - யஹியா வாஸித் -
நிழல் தேடி அலைந்தனர், மரம் வெட்டும் மனிர்கள், ஏன் புன்னகைக்கின்றாய் பூமித்தாயே. நம்மவனுகள் எல்லாம் காட்டுக்குள்ள போய் கள்ள மரம் வெட்டுவார்கள். வெட்டி, வெட்டி மொத்த காட்டையும் அழித்துவிட்டு, இறுதியில், இந்த மண்ணாங்கட்டி காட்டில் ஒதுங்கி நிற்பதற்கு கூட ஒரு நிழல் இல்லையே என வருத்தப்படுவார்கள். வருத்தப்பட்டார்கள், இப்போ வருத்தப்படுகின்றார்கள். ஆம் வருத்தப்படுகின்றார்கள். கொலை செய்யும் மனிதர்கள். கொலை செய்த மனிதர்கள். கொலைக்கு கொலைக்கருவி வாங்கிக் கொடுத்த மனிதர்கள் எல்லாம் வன்னி முகாம் வேதனை பற்றி வருத்தப்படுகின்றார்கள்.
அடியேய் பொண்டாட்டி எனக்கு 15 நாளில் பிள்ளை பெற்றுத்தருவாயா என என்ட பொண்டாட்டியிடம் கேட்டேன். இந்தாளுக்கென்ன லுசோ. பிள்ளை பெற பத்துமாதம் எடுக்கும் புருஷனாரே என்றாள். அதற்கு ஏதாவது மெஷினுகள் இல்லையாடி எனக்கேட்டேன். அடமுட்டாளே அது நியதி. டார்வின் தத்துவம் அல்லது இறைவனின் ஆக்கல் தத்துவம் என்றாள்.
போனமாதம் எனது 5 வயதுப் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச்சென்று, என்பிள்ளை உடனடியாக ஓஎல் எக்ஸாம் எடுக்க வேண்டும் என்றேன். பாடசாலைப் பொறுப்பாளர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, அண்ணே உங்கள் பிள்ளையை திடீரென 10ம் வகுப்பில் கொண்டு போய் இருத்த முடியாது. ஒவ்வொரு வகுப்பாக முதல் வகுப்பில் இருந்து படிக்க வேண்டும் என்றார்.
நேற்று விவசாயத்திணைக்கள அதிகாரியைச் சந்தித்து, நாளைக்கு என்வயலில் நெல் விதைக்கப் போகின்றேன். நாளை மறுதினம் அறுவடை செய்யலாம்தானே என்றேன். அவர் என்ர அடுத்த வீட்டுக்காறனுக்கு போன் பண்ணி, இந்தாளுக்கு மறகளண்டுட்டுது பக்கத்து வீட்டுக்காறர்களெல்லாம் கவனமாக இருங்கோ எனக்கூறியுள்ளார். ஆனால் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களை நாளைக்கே குடியேற்று, குடியேற்ற வேண்டும், குடியேற்றாவிட்டால் மீண்டும் தொடங்கும் 5ம் கட்டப் போராட்டம் என எச்சரிக்கை விடுகின்றனர் கொலை செய்யும் மனிதர்கள்.
உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம், பேசுவதற்குச் சுதந்திரம் என சகல சௌபாக்கியங்களுடனும் இருந்து கொண்டு வியாபாரத்தை தொடங்கியுள்ளனர் புலன் பெயர் புண்ணியவான்கள். இது புது வியாபாரம். மங்கையர்க்கரசியக்கா சிங்களனின் தோலை உரித்து செருப்பாக அணிவேன் என 1971ல்தொடங்கி வைத்த வியாபாரம், காசியண்ணா, ஈழவேந்தன் அண்ணா, என கொஞ்சகாலம் தொய்யோ தொய்யென தொங்கி செய்த தொப்பி வியாபாரம், ஈபிஆர்எல்எப், ரெலோ, புளட், ஈரோஸ் என 1977 முதல் 1987 வரை கும்மியடித்து, கூப்பாடு போட்டு, போஸ்ர் ஒட்டி வடம் பிடித்த வியாபாரம், பின்னர் கட் அன்ட் ரைட்டானவர்கள் என சொல்லிக் கொண்டு வந்து ஆளையாள் கொன்று, அண்ணனை தம்பி கொன்று, தம்பியை அண்ணன் கொன்று, இருவரையும் அடுத்த வீட்டுக்காறன் கொன்று, எல்லோரையும் ஒருவர் கொன்று, ஒரு இயக்கம் கொன்று, அவர், அந்த நபர் தான்தோன்றி, அவருக்கு ஆரத்தி எடுத்து, அபிஷேகம் செய்து, குல்லி சூல் ஆடி ( இது தமிழ் பேசும் முஸ்லீம்கள் பாவிக்கும் வார்த்தை. இதன் அர்த்தம். நான்தான், இனி நான்தான், இனி எல்லாமே நான்தான் என்ற ஒரு மஸ்து நிலையில் கூறும் சொல் ) அடம்பிடித்து, ஆர்ப்பரித்து, கட்டுநாயக்கா, அனுராதபுரம். ஆணையிறவு என சிங்களத்தை கொன்று, எங்களுக்கு புள்ளிவிபரங்கள் சொல்லி, புலம் பெயர் நாடெல்லாம் ரொக்கட் லோஞ்சருக்கு, பைபர்கிளாஸ் போட்டுக்கு, ஏகே 47க்கு என பணம் குவித்து, வியாபாரத்தை பெருக்கோ பெருக்கென பெருக்கி, இப்போ மார்கட்டில் விற்பதற்கு எதுவும் இல்லாமல், 3லட்சம் வன்னிப் புனிதர்களை ஏலத்துக்கு கொண்டு வந்துள்ள ஏல வியாபாரம்.
சிங்களவன் மஞ்சல் துண்டுக்கு களுத்தறுப்பான் எனவும், சோனி வியாபாரத்துக்காக என்ன பொய்யும் சொல்வான் எனவும் நம்மவர்கள் சொல்வார்கள். ( நான் இங்கு குறிப்பிட்டது என் போன்ற தில்லுமுல்லுக்காறர்களை.) ஆனால்
வலி படைத்து முறம் எடுத்து புலி அடித்த தமிழினம்
கிலி பிடித்த நிலை படைத்து வெலவெலத்து வாழ்வதோ
மகள் இறக்க முலை அறுக்க முடிவெடுத்த தமிழினம்
புகழ் இறக்க மொழி இறக்க வெலி நகைக்க வாழ்வதோ என புலன்பெயர் புண்ணியவான்களுக்கு வேப்பிலை அடித்தவர்கள், இப்போ தடுக்கி குப்புற விழுந்து, அழுது புலம்புகின்றனர். நெஞ்சை நிமிர்த்தி, இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் போலில்லாமல், இறுதி வரையும், அந்த மே 17 இறுதிவரையும், அவன் என்ன மண்ணாங்கட்டியைச் செய்தானோ தெரியாது, ஆனால் அந்த இறுதிநாள் வரையும் மக்களோடு மக்களாக நின்று, இறந்தானே அவன் தலைவன். மனிதன், மனிதாபிமானி. அவனுக்கு எப்போதுமே நாம் ஒரு சலாம் போடலாம். அந்த 17ம் திகதி அவர் செய்த அந்த செயலுக்கு மட்டும்தான் இந்த சலாம். அதற்காக மொத்த சூரசம்ஹாரம்களுக்கும் சலாம் போட்டுவிட்டதாக நினைத்து விடாதீர்கள்.
ஆனால் புலத்தில் இருந்து கொண்டு அழுது, அழுது மீண்டும் கண்ணீர் கதைகள் சொல்ல இந்த புண்ணாக்குகளுக்கு என்ன தகுதி இருக்கின்றது. அந்த வன்னி மக்கள் யாரும் இப்போ அழவில்லை. அழ அவர்களிடம் கண்ணீர் இல்லை. அவர்கள் அவதிப்படுகின்றார்கள். அவதிப்படட்டுமே. நமது ஒரு பத்துநிமிட காமவெறிக்காக 10 மாதம் குழந்தையைச் சுமந்து கொண்டு நமது பொண்டாட்டிமார் அவதிப்படவில்லையா. நமது பிள்ளைகள் படித்து ஓஎல், ஏஎல் எடுத்து ஒரு நல்ல தொழிலில் அமர வேண்டுமென நாம் அவனுக்காக சிக்கன் சொப்பிலிலும், பெற்றோள் கராஜுகளிலும், அரபிக்களின் கக்கூசுகளிலும் வருடக்கணக்காக அவதிப்படவில்லையா. வயலில் நெல்லை விதைத்துவிட்டு, உரம் வேண்டவும், கிருமி நாசினி வேண்டவும், காலம்தவறி மழை, வெயில் வந்துவிடுமோ எனவும் தினம், தினம் அவதிப்படவில்லையா. அவதிப்படட்டும். அந்த வன்னிப்புனிதர்கள் அவதிப்படட்டும்.
அவதிப்பட்டுவிட்டு ஆறுதலாக அவர்கள் வெளியே வரட்டும். வந்து நிச்சயமாக இந்த புண்ணாக்குகளிடம் கேள்விகள் கேட்பார்கள். கேட்க வேண்டும் என்பதுதான் மொத்த மனிதாபிமானிகளின் பேரவா. புலத்தில் வரி அறவிட்டாயே அதில் எத்தனை வீதத்தை எங்களுக்கு செலவு செய்தாய். புலத்திலிருந்து ஒபாமா கப்பல் அனுப்புவதாக சொன்னாயே எங்கே அந்த கப்பல் என்பதில் தொடங்கி, எம்குலப் பெண்களுக்கு மஞ்சல் அரைத்துக் கொடுத்தாயா மானங்கெட்டவனே, எதற்காக எங்களை ஏலம் விட்டாய் என்பதுவரை அந்த புண்ணியவான்கள் கேட்க வேண்டும். மனிதாபிமானிகள் என்று சொல்லிக் கொண்டு இப்போது கிளம்பியிருக்கும் முன்னாள், இந்னாள் போராளிகள் பிளஸ் மனிதத்தை நேசிக்கும் புலம் பெயர் இளையோர்கள் வரை பணமறவிட்டவர்களை அழைத்து கேட்க வைக்கவேண்டும்.
தமிழ் அது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு தெய்வீகம். அது ஒரு சாத்வீகம். தமிழனுக்கு அது ஒரு கம்பீரம், அது ஒரு அபின், அது ஒரு போதை. அதன் இசை, அதன் சொல்லாடல், அதன் பாரம்பரியம், அதன் கவிநயம், அதைப் பேசும் நாம், அதை கரைத்துக் குடித்து, அதை பேணி, அதை மேலெல்லாம் சேறாக பூசி வாழ்ந்து திரிந்த நாம். இன்று மொழி தெரியாத நாட்டில், வேர்வை சிந்தாத மண்களில், வேற்று மதக்காறர்களுக்கு மத்தியில் வக்கற்றுப் போய், வாழ்ந்த மண்ணை வான்அலைகளில் பார்த்துக்கொண்டு, வேதாந்தம் பேசுபவர்களின் வேள்விகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றோம். எட்டாத தொலைவில் அந்த புனிதர்கள். போர்த்துவதற்கு துணியின்றி, போடுவதற்கு உடையின்றி, வயிறாற குடிப்பதற்கு நீரின்றி. உதவுவார்களா. உதவுவார்களா. மனிதர்கள் யாராவது வந்து உதவுவார்களா என ஏங்கிக் கொண்டு. ஜஸ்ட் போர் சம் வோட்டர் ஓர் பிறட். ( பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே. என் நாமமும், எங்கள் சந்ததிகள் நாமமும் பரிசுத்தமடைவதாக )
எங்களை விடுங்கள். நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள். எட்டப்பர்கள். நீங்கள்தான் புத்தி ஜீவிகளாச்சே அந்த மண்ணாங்கட்டி புத்தியை கொஞ்ச நாளைக்கு அற(ம்)வழியில் செலுத்துங்களேன். செலுத்தி அரசை மிரட்டுங்களேன். எல்லா வன்னி மக்களுக்கும் வங்கிகளில் தனித்தனி எக்கவுண்ட்டுகள் திறக்கச் சொல்லுங்கள். அவர்களின் வங்கிக் கணக்கிலக்கங்களை பத்திரிகைகளிலும், இன்டர்நெட்டிலும் வெளியிடச் சொல்லுங்கள். அதில் ஒவ்வொரு குடும்பத்தையும் இங்கிருந்து ( புலம் பெயர் நாடுகளில் ) தெரிவுசெய்து, அழுதுபுலம்பும் அல்லது ஆர்ப்பரிக்கும் அல்லது சிங்களத்துக்கு மீண்டும் ஆப்பு வைக்கத் துடிக்கும் உறவுகளுக்கு கொடுத்து நேரடியாக அவர்களை பணம் அனுப்பச் சொல்லுங்கள். உண்மையாக நீங்கள் அந்த புனிதர்களை மதிப்பவர்களாக இருந்தால் முதலில் இதை செய்யுங்கள். அகதிக்கு தெய்வம்தான் துணை என்பார்கள். பிளீஸ் சகோதரர்களே. பிளீஸ். கொஞ்சநாட்களுக்காவது தெய்வங்களாக மாறுங்களேன்.
மகின்த சகோதரர்கள் எங்கேயோ, எதற்காகவோ தடுமாறுவது போல் தெரிகின்றது. ஆனால் அங்கு நமது இரத்தங்கள், உடன்பிறப்புக்கள் உவ்வாவுக்காக கஸ்டப்படுகின்றன சகோதரர்களே. நாடு கடந்த தமிழீழத்துக்காக வாக்கெடுப்பு நடாத்த புள்ளி விபரங்கள் சேகரிப்பதாக அறிகின்றோம். அதை ஆறுதலாக செய்யுங்கள். இதை, அவர்களுக்கு பணம் அனுப்புவதை உடனடியாகச் செய்யுங்கள் உடன் பிறப்புகளே. பத்தினிகள் சாபம் பொல்லாதது நண்பர்களே. பல பத்தினிச்சிகள் அங்கே அறம்பாட முன்னர், உங்கள் புகழ்பாட ஏற்பாடு செய்யுங்கள் ரத்தத்தின் ரத்தங்களே.
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போபவன் விட்டுக் கொடுப்பதில்லை. நீங்கள் இந்த வன்னிப்புனிதர்கள், கொஞ்சம் ஆசுவாசப்படும் வரை, கொஞ்சம் விட்டுத்தான் கொடுங்களேன். நிச்சயமாக கெட்டுப்போக மாட்டோம். தமிழன் கெட்டுப்போக மாட்டான். இல்லை, இல்லை சிறிலங்கா அரசை உண்டு இல்லையென பண்ணி விடுவோம் என முரசறைந்தால், இன்னுமொரு முப்பது வருடத்தில், சிறிலங்காவில் வவுனியா என்ற ஒரு குட்டி பிரதேசம் இருக்கின்றது, அங்கு ஒரு குட்டி தமிழீழம் இருக்கின்றது, அதில் ஒரு மூவாயிரம் தமிழர்கள் இருக்கின்றார்கள், எனக்கூறிக்கொண்டு, அவர்களுக்காக நமது பேரப்பிள்ளைகள் ஒரு இருபது பேர் ஜெனிவாவில் கொடி பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
கொடி, தமிழுக்கு அமுதென்று பெயர், அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொல்லிக் கொண்டு 35 லட்சம் தமிழ் பேசுவோரும் சிறிலங்காவில் இருந்து கொண்டு கொடிபிடிக்க வேண்டும். இங்கு வெள்ளைமாளிகையின்ட கோமணத்துக்குள்ளும், வெஸ்ட்மினிஸ்டர்ர கச்சைக்குள்ளும், ஜெனீவாவின்ட குண்டிக்குள்ளும் இருந்து கொண்டு பிடிக்க கூடாது. அப்படி கொடிபிடித்து, அடம் பிடித்ததின் பலனைத்தான் மொத்த தமிழ் பேசுபவனும் மே 17ல் முள்ளி வாய்க்காலில் அறுவடை செய்தான், செய்தோம். அவர்கள் வியாபாரிகள் அப்பர்களே. அவர்களது வியாபாரம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நாறோ நாறென நாறி, ஈரானிலும் நாற்றமெடுக்கத் தொடங்கியுள்ளது. இப்போது வன்னிப்புனிதர்கள் முள்ளுக்கம்பிக்குள்ளே இருக்கின்றார்களாம் என ஒரு புது வியாபாரம். இந்தியா பக்கத்தில் இருக்கும் வரை எந்த வியாபாரமும் வேகாது என்பது பால்குடிமறவா புள்ளைக்கும் தெரியும்.
தமிழ் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல. எங்களுக்கும் அதோடு நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்கின்றது உறவுகளே. அது எங்களுக்கும் சொந்தம். அது உங்களுக்கு வியாபாரப் பொருளாக இருக்கலாம். எங்களுக்கு அது உயிர் மூச்சு. உங்கள் எல்லா வியாபாரத்தையும் நிறுத்திவிட்டு முதலில் வன்னிப் புனிதர்களுக்கு மூச்சு போய் விடாமல் இருக்க உதவி செய்யப் பாருங்கள். அப்புறம் யார் நெல்லுகுத்துவதென வன்னிப் புனிதர்கள் முடிவெடுக்கட்டும். நீங்கள் ஒப்புக்குச் சப்பாணியாக அழுதவர்கள். அழுபவர்கள். ஆனால் அந்தப் புனிதர்கள் உண்மையாகவே அழுது, உண்மையாகவே வாழ்ந்து, உண்மையாகவே அனைத்தையும் இழந்து, உண்மையாகவே அவதிப்பட்டவர்கள். தமிழீழம் வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது அந்த அவதிப்பட்ட, அவதிப்படும் அந்த மனிதப் புனிதர்களே. VIII
more
-
ஆண்மைக்குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும் !!
குங்குமத்தில் ஆச்சி மனோரமா தான் முப்பது ஆண்டு காலமாக மனதில் அடக்கிவைத்து இருந்த மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். அதாகப்பட்டது, ஆண்மைக் குறைவுடைய ஆண்கள் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாகவும், எனவே திருமணத்திற்கு முன் பரஸ்பரம் மருத்துவ சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் எனவும், ஆண்மைக் குறைவோடு பெண்களை ( ஏமாற்றி ) திருமணம் செய்யும் ஆண்களை தண்டிக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்காக ஒரு தனி அமைப்பை தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
இனியும் இந்த கருத்தை வெளியிடாமல் இருந்தால் தான் பெண்ணாக பிறந்தததே அர்த்தமற்றதாகிவிடும், எனவே இனி தன் வாழ்வில் மீதம் இருக்கும் நாட்களை இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்த பெண்களின் விடிவுக்காக செலவிடப்போவதாக கூறி உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். இதே கருத்தை வலியுறுத்தி அவர் முதல்வரிடமும் ஒரு மனு கொடுத்திருக்கிறார்.
ஆச்சி., வாலிப வயோதிக அன்பர்களே என்ற வார்த்தைகளை பயன்படுத்தாததாலும், அவருக்கு லேகியம் விற்பனை செய்யும் யோசனை ஏதும் இருப்பதற்கான அறிகுறி ஏதும் அந்த பேட்டியில் தெரியாததாலும், நாம் அவரது கருத்துக்களை பரிசீலிகத்தான் வேண்டும்.
ஒரு தனி இயக்கம் ஆரம்பிக்கும் அளவுக்கு ஆண்மைக்குறைவு என்ன சர்வதேச பிரச்சினையா ? ஆச்சி குறிப்பிடுவதைப்போல பெருகிவரும் விவாகரத்திற்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு தான் காரணமா ?
சரி, மனோரமா மீதான தனிப்பட்ட அன்பினால் முதல்வரே இவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவே வைத்துக்கொள்வோம். அதன் விளைவுகளை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், வாலி தலைமையில் ” ஆண்மையை ஆராயச்சொல்லி சட்டம் போட்ட ஆதவனே ” என்கிற தலைப்பில் கவியரங்கம் நடக்கும், டாக்டர் நாராயண ரெட்டி, காமராஜ் ஆகியோர்களின் மருத்துவமனை டோக்கன்களை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அராஜகமான வழிகளில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்பதாக ஜெயலலிதா அறிக்கை விடுவார், மருத்துவப்பரிசோதனையின் முடிவுகள் திமுக வினருக்கு மட்டும் பாசிடிவ் என்று வரும்படி கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக விஜயகாந்த் குற்றம் சாட்டுவார்.
இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கும் ?
முதலில் ஆண்மைகுறைவு என்பதற்க்கு ஒரு முழுமையான வரையறை இதுவரை கிடையாது. இனியும் அது முடியாது. ஆச்சி குறிப்பிடும் ‘ ஆண்மை ‘ என்பது ஒரு ஆணின் பண்பியல் தொகுப்பு ( personality ) , வளர்க்கப்பட்ட முறை, இல்லத்துணை மீதான ஈர்ப்பு, அவரது புறச்சூழல் என ஏராளமான காரணிகளை உள்ளடக்கியது. ஒரு மருத்துவர் இதை சோதனை செய்து அறிக்கை அளிப்பது என்பது எந்த காலத்திலும் நடக்காது.
பெரும்பாலான விவாகரத்துக்களுக்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு ஒரு காரணமாக இருப்பது இல்லை. தம்பதிகளிடையேயான புரிதலில் உள்ள முரண்பாடும் தன் இல்லத்துணைக்கான குறைந்தபட்ச அன்பையும் மரியாதையையும் தரத் தவறுவதும்தான் மிகப்பெரும்பாலான விவாகரத்துக்களுக்கு காரணமாக இருக்கிறது.
கள்ளக்காதலின் கதை வேறு, முறையற்ற காதல் என்பது எல்லா காலத்திலும் இருப்பதுதான். பத்திரிக்கைகள் அதற்கு அளிக்கும் அதீத முக்கியத்துவம்தான் இதை ஒரு பெரிய சமூக சிக்கலாக காட்டுகிறது. ( சரியாக கவனியுங்கள்.. சாதாரண மனிதனின் முறையற்ற காதல்தான் கள்ளக்காதல் என குறிப்பிடப்படுகிறது.. பிரபுதேவா & நயன் தாரா உறவை காதல் என்றுதான் எல்லா பத்திரிக்கையும் எழுதுகிறது).
திருமணமாகும் பெண்கள் மட்டும் ஏமாற்றப்படுவதில்லை. காதலிலும் ஏமாற்றப்படுகிறார்கள். காதலித்து ஏமாற்றப்படும் பெண்கள் நல்ல?! ஆண்மையுள்ள ஆண்களால்தான் கைவிடப்படுகிறார்கள்.
ஆண்மை இல்லாமல் திருமணம் செய்து ஏமாற்றுகிறார்கள், எனவே ஆண்மை உள்ளவன்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றால் (கட்டாய பரிசோதனை என்பதன் பொருள் இதுதான்)., ஆண்மை உள்ளவன் காதலித்து ஏமாற்றுகிறான் (பலர் தன் ஆண்மையை காதலியிடம் பரிசோதித்துவிட்டுத்தான் கைவிடுகிறார்கள்- ஒருவகையில் இவர்கள் ஆச்சியின் யோசனையை 50% கடைபிடிக்கிறார்கள்).
எனவே இதைத்தடுக்க காதலிப்பவனுக்கு ஆண்மையே இருக்கக்கூடாது என ஒரு சட்டம் போடலாமா ? இதற்கு நிகரான மடத்தனம்தான் ஆச்சி வைக்கும் கோரிக்கையும்.
பெண்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவேண்டும் என்கிற மனோரமாவின் நோக்கம் நியாயமானது. அதில் தனிப்பட்ட காரணம் ஏதும் இருக்கமுடியாது. ஆனால் அவர் பிரச்சினைக்கு சொல்லும் காரணமும் அதற்கான தீர்வும் நகைப்புக்குரியவை. தனி இயக்கம் காணவேண்டிய அளவுக்கு கடுமையான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏராளம் உண்டு. அதற்கு ஆச்சி போராட முன்வந்தால் பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு… ஆச்சியை பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு.
-நன்றி வில்லவன்
more
-
யாழ். முஸ்லிம்கள் மீள் குடியேற எவ்வித தடையுமில்லை- அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா!
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த இடங்களில் குடியேற எவ்வித தடையுமில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். “யாழ். முஸ்லிம்கள் எந்த நேரத்திலும் இங்கு வந்து குடியேறலாம். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எப்படி கெளரவமான முறையில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தார்களோ,அதேமுறையில் வாழ அம்மக்கள் மீளக்குடியமர வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
பலவந்த வெளியேற்றமும் கெளரவமான மீள் குடியேற்றமும் “எனும் தொனிப் பொருளிலான கலந் துரையாடலொன்று யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் இடம்பெற்றது. மக்கள் பணிமனை நேற்று முன்தினம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கெளரவமான மீள் குடியேற்றம் என்ற சொற்பதம் இங்கு உபயோகப்படுத் தப்பட்டிருப்பினும் இதனை தன்னால் ஏற்றுக் கொள்ள இயலாதென்றும் ஏனெனில், இந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் எப்போதும் வந்து இங்கு குடியேறலாம் என்றார். இதற்கு யாரும் தடையாக இருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த அவர், வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களது இருப்பிடங்கள் அம்மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றும் இதனை யாரும் தட்டிப் பறிக்க இயலாது என்றும் முஸ்லிம் மக்களது வீடுகளை எவராவது எடுத்திருப்பின் அவற்றை அம்மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
நடந்தவற்றை மறந்து ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாக அமையும் என்பதை வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இங்குள்ள தமிழ் மக்கள் தங்களது சகோதர முஸ்லிம் மக்களை கெளரவமாக வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
more
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


