-
25.02.2010 - ஜெனரல் சரத் பொன்சேகாவின் செய்மதி தொலைபேசி கட்டணம் 2.8 மில்லியனாம்
ஜெனரல் சரத் பொன்சேகா யாழ். கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த செய்மதி தொலைபேசிக்கான கட்டணம் சுமார் 28 இலட்சம் ரூபாவாக அதிகரித்திருந்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுவரையில் நிலுவையாகவுள்ள இத்தொகையினை தேவை ஏற்படும் பட்சத்தில் ஜெனரல் பொன்சேகாவின் மாதாந்த ஓய்வூதியத் தொகையிலிருந்து கழித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2000ஆம் ஆண்டு யாழ். கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ தேவைகளுக்கென செய்மதித் தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.இந்தத் தொலைபேசியைப் பயன்படுத்தி அவர் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு தொடர்ச்சியாக அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.கட்டுப்பாடின்றி இத்தொலைபேசி இணைப்பு பயன்படுத்தப்பட்டதால் குறிப்பிட்ட காலப்பகுதியில் அதனது பட்டியல் தொகை சுமார் 2.8 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.இதன்படி உத்தியோகபூர்வ தேவையின் நிமித்தம் அத்தொலைபேசியை பயன்படுத்தக்கூடிய ஆகக் கூடிய பட்டியல் எல்லை மீறப்பட்டுள்ளது.இப்பெருந்தொகைக் கட்டணம் இதுவரை செலுத்தப்படாது நிலுவையாக உள்ளமை தெரியவந்துள்ளது. இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சாந்த கோட்டேகொட கட்டளைத் தளபதியாக இருந்த பொன்சேகாவை பணித்திருந்த போதிலும் அவர் அதனை அலட்சியப்படுத்தியதாக தற்போது தெரியவந்துள்ளது.இந்நிலையில் அக்காலப்பகுதியில் குறித்த கட்டணப் பட்டியல்களுக்கு பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் நிமல் ஜயசூரிய பின்னர் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளராக நியமிக்கப்பட்ட போது மேற்படி நிலுவைக் கட்டணத்தை செலுத்துமாறு பொன்சேகாவை கேட்டுள்ளார்.இருந்தபோதும் இதற்கு அவர் சரியான பதிலளிக்கவில்லை. இவ்வாறிருக்கையில் இராணுவ தளபதியாக பதவியுயர்வு பெற்ற சரத் பொன்சேகா பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியே மேஜர் ஜெனரல் நிமல் ஜயசூரியவை குறித்த பதவியிலிருந்து நீக்கினார் என்று தெரியவந்துள்ளது.இதேவேளை, நிலுவைக் கட்டணங்கள் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோவை நிலவிரிப்பிற்கு கீழ் (கார்பட்) மறைத்து வைக்கப்பட்டுவிட்டதாக தெரிய வந்துள்ள போதிலும், இந்த தொலைபேசி பட்டியல் நிலுவையாக உள்ளது தொடர்பான வேறு சில ஆவணங்கள் படைத்தரப் பினரிடம் இருந்துள்ளன. இதனடிப்படையிலேயே இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் உரிய விசாரணைகளின் பின்னர் தேவையேற்படும் பட்சத்தில் முன்னாள் இராணுவ தளபதியும் கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதானியுமான ஜெனரல் பொன்சேகாவின் ஓய்வூதியத்திலிருந்து இந்தக் கட்டணத் தொகையைக் கழித்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்: