-
25.02.2010 - ஜெனரல் சரத் பொன்சேகாவின் செய்மதி தொலைபேசி கட்டணம் 2.8 மில்லியனாம்
ஜெனரல் சரத் பொன்சேகா யாழ். கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த செய்மதி தொலைபேசிக்கான கட்டணம் சுமார் 28 இலட்சம் ரூபாவாக அதிகரித்திருந்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுவரையில் நிலுவையாகவுள்ள இத்தொகையினை தேவை ஏற்படும் பட்சத்தில் ஜெனரல் பொன்சேகாவின் மாதாந்த ஓய்வூதியத் தொகையிலிருந்து கழித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2000ஆம் ஆண்டு யாழ். கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ தேவைகளுக்கென செய்மதித் தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.இந்தத் தொலைபேசியைப் பயன்படுத்தி அவர் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு தொடர்ச்சியாக அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.கட்டுப்பாடின்றி இத்தொலைபேசி இணைப்பு பயன்படுத்தப்பட்டதால் குறிப்பிட்ட காலப்பகுதியில் அதனது பட்டியல் தொகை சுமார் 2.8 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.இதன்படி உத்தியோகபூர்வ தேவையின் நிமித்தம் அத்தொலைபேசியை பயன்படுத்தக்கூடிய ஆகக் கூடிய பட்டியல் எல்லை மீறப்பட்டுள்ளது.இப்பெருந்தொகைக் கட்டணம் இதுவரை செலுத்தப்படாது நிலுவையாக உள்ளமை தெரியவந்துள்ளது. இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சாந்த கோட்டேகொட கட்டளைத் தளபதியாக இருந்த பொன்சேகாவை பணித்திருந்த போதிலும் அவர் அதனை அலட்சியப்படுத்தியதாக தற்போது தெரியவந்துள்ளது.இந்நிலையில் அக்காலப்பகுதியில் குறித்த கட்டணப் பட்டியல்களுக்கு பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் நிமல் ஜயசூரிய பின்னர் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளராக நியமிக்கப்பட்ட போது மேற்படி நிலுவைக் கட்டணத்தை செலுத்துமாறு பொன்சேகாவை கேட்டுள்ளார்.இருந்தபோதும் இதற்கு அவர் சரியான பதிலளிக்கவில்லை. இவ்வாறிருக்கையில் இராணுவ தளபதியாக பதவியுயர்வு பெற்ற சரத் பொன்சேகா பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியே மேஜர் ஜெனரல் நிமல் ஜயசூரியவை குறித்த பதவியிலிருந்து நீக்கினார் என்று தெரியவந்துள்ளது.இதேவேளை, நிலுவைக் கட்டணங்கள் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோவை நிலவிரிப்பிற்கு கீழ் (கார்பட்) மறைத்து வைக்கப்பட்டுவிட்டதாக தெரிய வந்துள்ள போதிலும், இந்த தொலைபேசி பட்டியல் நிலுவையாக உள்ளது தொடர்பான வேறு சில ஆவணங்கள் படைத்தரப் பினரிடம் இருந்துள்ளன. இதனடிப்படையிலேயே இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் உரிய விசாரணைகளின் பின்னர் தேவையேற்படும் பட்சத்தில் முன்னாள் இராணுவ தளபதியும் கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதானியுமான ஜெனரல் பொன்சேகாவின் ஓய்வூதியத்திலிருந்து இந்தக் கட்டணத் தொகையைக் கழித்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
more
-
அமெரிக்க புலனாய்வினரின் வருகையை கண்காணிக்க இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பாக தகவல்களைத் திரட்டுவதற்காக இராணுவ மற்றும் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் இணைந்து விசேட பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் சி.ஐ.ஏ. புலனாய்வுப் பிரிவினர் சிலர் எதிர்வரும் பொதுத் தேர்தல் செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கைக்கு வரத் தயாராகி வருவதாக இந்தியா மற்றும் தாய்லாந்து புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களில் சந்தேகத்திற்கிடமானவர்களைப் பின்தொடர்ந்து தகவல்களை சேமிப்பதே இந்தப் பிரிவை ஏற்படுத்தியதற்கான நோக்கம் எனக் கூறப்படுகிறது. கொழும்பைச் சூழவுள்ள விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிலரை கடந்த சில தினங்களில் மேற்கூறிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு புலனாய்வு வலையமைப்பு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காலத்தில் கூட செயற்படுத்தப்படவில்லையென அரச புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவே இப்படியான புலனாய்வுப் பிரிவை முதலில் ஏற்படுத்தியதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் விமானநிலையத்தில் கடமையாற்றும் பிறிதொரு பிரிவினர் புலம்பெயர் தேசங்களில் இருந்து செல்லும் தமிழர்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கைகளிலிலும் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு சார்பாக செயற்பட்டவர்கள் அல்லது ஆதரவாளர்களாக இருந்தவர்களுடைய பெயர்ப்பட்டியலை புலனாய்வுப் பிரிவினர் தம்மிடம் ஒப்படைத்திருப்பதகாவும் அதில் உங்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டடிருக்கின்றது எனக் கூறி அதனை சீர் செய்து நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிப்பதாயின் பணம் செலவாகும் எனக் கூறி அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பெற்றுக் கொள்வதாகவும் பல பயணிகள் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.
more
-
இலங்கை அரசாங்கம் கண்டனம்
பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை என்னும் அமைப்பின் கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கலந்து கொண்டதை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முன்வைத்து செயற்பட்டு வருகின்ற இந்த உலகத் தமிழர் பேரவை என்னும் அமைப்பை, விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவு அமைப்பாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை அரசாங்கம் அதில் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் கலந்துகொள்வது இலங்கையின் இறைமையை குறைத்து மதிப்பிடும் செயலாக அமையும் என்று கவலை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக இலங்கைக்கான பதில் பிரிட்டிஷ் தூதுவர் மார்க் கூடிங் அவர்களை அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவர்கள், தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.பெரும்பாலும் மேற்கு நாடுகளில் இயங்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புக்களை ஒரு குடையின் கீழ் இணைத்து செயற்படும் அமைப்பாக உலக தமிழர் பேரவையை விபரித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை ஒன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகளில் அந்த அமைப்பு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.இது இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு நகர்வு என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.ஆகவே இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அங்கு அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவத்ற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால், உலக தமிழர் பேரவையின் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளக் கூடாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.ஆனால், இன்று காலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த அந்தக் கூட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.அரசியல் தீர்வுஅங்கு உரையாற்றிய அவர், இலங்கை பிரச்சினைக்கு ஒரு அமைதியான, அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.அந்த தீர்வு எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து இலங்கை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.உண்மையான தேசிய நல்லிணக்கத்தின் மூலம் ஒரு இறுதியான தீர்வை இலங்கை அடைய வேண்டும் என்பதே பிரிட்டனின் அவா என்றும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.இந்த இலக்குக்காக செயற்படுகின்ற இலங்கையின் அனைத்து மக்களுடனும்- அவர்கள் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கு இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து பிரிட்டன் சேர்ந்து செயற்படும் என்றும் மிலிபாண்ட் அவர்கள் உலகத் தமிழர் பேரவையின் கூட்டத்தில் பேசியுள்ளார்.அத்துடன் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்ப்பட வேண்டும் என்றும் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் இன்னமும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் எஞ்சியுள்ள மக்கள் மீள் குடியேற்றப்படுவதுடன், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் விடுததலை செய்யப்பட்டு, மறுவாழ்வளிக்கப்பட வேண்டும் என்றும் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார்.
more
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)